திருச்சி திருவெறும்பூர் அடுத்த காட்டூர் அம்மன்நகர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வபிருந்தா. பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 2016 ஆம் ஆண்டில் பிரவீன்குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு 2017-ல் ஆண் குழந்தை பிறந்தது. பிரணீத் என்று பெயர்வைக்கப்பட்ட அக்குழந்தைக்கு தற்போது 8 வயதாகிறது.
குழந்தையை பாதுகாத்து வளர்ப்பது, வீட்டு வேலைகளை செய்வது, கணவர், மாமனார், மாமியார் என குடும்பத்தில் உள்ளவர்களை பராமரித்து அவர்களிடம் பரஸ்பரம் அன்பு செலுத்துவது போன்ற சராசரியான பணிகளை செய்துவந்தார். இந்த சராசரியான பணிகளுக்கு மத்தியில் தான் பெற்ற கல்வியை பயன்படுத்தி இச்சமூகத்திற்கு எதையாவது செய்தாக வேண்டும் என்ற ஏக்கத்தோடும் இருந்துள்ளார்.
இந்நிலையில், செல்வபிருந்தாவுக்கு இரண்டாவது குழந்தையாக 2023-ல் ஒரு பெண்குழந்தை பிறந்தது. பிரணிக்கா என பெயரிடப்பட்ட அக்குழந்தைக்கு தற்போது இரண்டு வயதாகிறது. இக்குழந்தை பிறந்தவுடன், குழந்தையின் உணவு தேவையைக்காட்டிலும் கூடுதலாக தாய்ப்பால் சுரக்கத் தொடங்கியது. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலின் தேவை குறைவு என்பதையும், அக்குழந்தை வளர வளர தாய்ப்பாலின் தேவை அதிகரிக்கும் என்பதையும் செல்வப் பிருந்தா புரிந்து கொண்டார்.
அப்போது, அரசு மருத்துவமனைகளில், குறை பிரசவத்தில் பிறந்த பல குழந்தைகள் பலகீனமாகவும், நோய் வாய்ப்பட்டும், தாய்ப்பால் கிடைக்காமல் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் சிகிச்சை பெற்றுவருவது செல்வபிருந்தாவுக்கு தெரியவந்தது. சிகிச்சையில் உள்ள அத்தகைய குழந்தைகளுகளின் பசியைப் போக்கி, அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்து, அவர்களது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் வல்லமை தாய்ப்பாலுக்கு உண்டு என்பதை செல்வபிருந்தா புரிந்துகொண்டார். தான்பெற்ற குழந்தையின் உணவுத் தேவைக்கு அதிகமாக சுரந்த தாய்ப்பாலினை, மருத்துவர்களின் வழிகாட்டலுடன், 'அமிர்தம் தாய்ப்பால் தானம்' என்ற அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் துணையுடன் தானம் கொடுக்க தொடங்கினார்.
/indian-express-tamil/media/post_attachments/a9a3392d-8e5.jpg)
அவ்வாறாக கடந்த இரண்டு ஆண்டுகளில் 300.17 லிட்டர் தாய்ப்பாலை தானமாக கொடுத்ததன் விளைவாக, திருச்சி அரசு பொது மருத்துவமனையில் தாய்பாலுக்காக ஏங்கி தவித்த எண்ணற்ற குழந்தைகள் உயிர்பெற்றுள்ளனர். அதனை அங்கீகரித்து செல்வ பிருந்தாவை பாராட்டி, 'ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்' நிறுவனமும், 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்' நிறுவனமும் சான்று மற்றும் பதக்கம் வழங்கி கௌரவித்துள்ளது.
இதுகுறித்து செல்வபிருந்தா தெரிவிக்கையில், "மருத்துவர்களின் வழிகாட்டுதல்படி, உடல் ஆரோக்கியம் குறித்த பரிசோதனை சான்று பெற்றுக்கொண்டு, வீட்டில் இருந்தபடியே தாய்பப்பால் சேமித்து வைக்க தொடங்கினேன். அதனை அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்ப்பதற்கு தன்னார்வலர்கள் உதவினார்கள். அரசு மருத்துவமனைனயின் மைக்ரோ பயாலஜி துறையை சேர்ந்த மருத்துவர்கள் எனது தாய்ப்பாலை ஆய்வு செய்த பின்னர் அதனை சிகிச்சையில் உள்ள குழந்தைகளுக்கு வழங்கினார்கள்.
தாய்ப்பால் கிடைக்காமல் தவிக்கும் குழந்தைகளின் உயிரை காப்பாற்றுகிறோம் என்ற மனமகிழ்ச்சியில் எனக்கு குறைவில்லாமல் தாய்ப்பால் சுரந்தது. எனது கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் எனது மகளும் எவ்வித குறையும் இல்லாமல் ஆரோக்கியத்துடன் வளர்ந்தால், கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் எடை அதிகரிக்கும். குழந்தை பிறந்த பின்பு அவர்கள் தங்களது உடல் எடை குறைக்க போராடுவார்கள். எனக்கு குழந்தை பிறந்த பின்னர் எனது உடல் எடையை வேகமாகவும், வெகுவாகவும் குறைத்து, எனது உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள, நான் தாய்ப்பால் தானம் செய்தது உதவியாக இருந்தது" என்று அவர் கூறினார்
தமிழக முழுவதும் சுமார் 10,000 பெண்கள் தாய்ப்பால் தானம் செய்துவருகிறார்கள். ரத்த தானம், உடல் உறுப்பு தானம் போன்று தாய்ப்பால் தானம் செய்வது குறித்த விழிப்புணர்வை, தாய்மார்களிடம் அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்.