புதிய சமையல் பாத்திரங்களை வாங்கும்போது ஏற்படும் உற்சாகம் தனி. ஆனால், அவற்றில் ஒட்டப்பட்டுள்ள பிராண்ட் ஸ்டிக்கர்களை நீக்குவது சவாலான காரியமாக மாறும். ஒட்டும் பசையின் எச்சங்கள் பாத்திரங்களில் படிந்து, அவற்றின் அழகைக் கெடுப்பதோடு, சுத்தம் செய்வதையும் கடினமாக்கும். இந்தப் பிரச்னையை எளிதாகத் தீர்க்க, சில எளிய குறிப்புகளைப் பார்க்கலாம்.
மாஸ்டர்செஃப் பங்கஜ் பதௌரியா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அற்புதமான சமையல் குறிப்பு பகிர்ந்துள்ளார். இது ஸ்டிக்கர்களையும் அவற்றின் பசையையும் எந்தக் குழப்பமும் இல்லாமல் நீக்க உதவும்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
கேஸ் அடுப்பை மிதமான தீயில் எரிய விடவும். ஸ்டிக்கர் ஒட்டியுள்ள பாத்திரத்தின் பகுதியை சுடர் அருகே சிறிது நேரம் காட்டவும். பாத்திரம் கண்ணாடி (அ) எஃகு பாத்திரமாக இருந்தாலும் இந்த முறை பாதுகாப்பானது என்கிறார் பங்கஜ் பதௌரியா. வெப்பம் பசையை உருக்க உதவும். ஸ்டிக்கர் தளர்த்தப்பட்டவுடன், அதை எளிதாக உரிக்கலாம். ஸ்டிக்கரை நீக்கிய பிறகு, மீதமுள்ள பசையின் மீது சிட்டிகை உப்பு தூவி, ஒரு துளி எண்ணெய் விடவும். பின்னர், மெதுவாக வட்ட வடிவில் தேய்க்கவும். கடைசியாக, சுத்தமான துணியால் துடைக்க, உங்கள் பாத்திரம் புதிதுபோல் சுத்தமாகப் பளபளக்கும்.
செஃப் அனன்யா பானர்ஜி போன்றோரும் ஸ்டிக்கர் பசையை நீக்க சில பயனுள்ள வழிகளைப் பகிர்ந்துள்ளனர்:
சூடான நீரில் ஊறவைத்தல்: ஒரு கிண்ணம் (அ) சிங்கில் சூடான நீர் மற்றும் சில துளிகள் பாத்திரம் கழுவும் திரவத்தை சேர்க்கவும். ஸ்டிக்கர் ஒட்டிய பாத்திரத்தை 15-20 நிமிடங்கள் அதில் ஊறவைக்கவும். சூடான நீர் பசையை தளர்த்தும், சோப்பு பசையின் எண்ணெய்களைக் கரைக்க உதவும். இந்த முறை உலோகம், கண்ணாடி மற்றும் கடின பிளாஸ்டிக் பாத்திரங்களுக்கு மிகவும் சிறந்தது.
சமையல் எண்ணெய் பயன்படுத்துதல்: சிறிது காய்கறி எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது வேர்க்கடலை வெண்ணெயை ஒட்டும் பகுதியின் மீது தடவவும். 5-10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். பின்னர், ஒரு துணி அல்லது பஞ்சு கொண்டு மெதுவாக துடைக்கவும். எண்ணெய்கள் ஒட்டும் பசையின் எச்சங்களை திறம்பட நீக்கும்.
வெள்ளை வினிகர் பயன்படுத்துதல்: ஒரு காட்டன் பந்தை வெள்ளை வினிகர் அல்லது ரப்பிங் ஆல்கஹாலில் நனைத்து, அதை ஸ்டிக்கர் மீது ஒரு நிமிடம் அழுத்தி வைக்கவும். பின்னர், ஸ்டிக்கரை உரிக்கவும். மீதமுள்ள எந்த எச்சத்தையும் துடைக்கலாம். இந்த இரண்டும் பெரும்பாலான பாத்திரங்களுக்கு சேதம் விளைவிக்காமல் பசையை கரைக்கும் தன்மை கொண்டவை. இந்த எளிய குறிப்புகளைப் பயன்படுத்தி, உங்கள் புதிய சமையல் பாத்திரங்களை ஸ்டிக்கர் மற்றும் பசை இல்லாமல், பளபளப்புடன் பயன்படுத்தத் தொடங்கலாம்.