கொரோனா தொற்று பரவல் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே கிடைத்து வந்தன. அதை பக்தர்கள் முன்பதிவு செய்து, ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
Advertisment
ஒவ்வொரு மாதத்திற்கும் தேவையான டிக்கெட்டுகள், அதற்கு முந்தைய மாதத்தின் இறுதி வாரங்களில், தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படும். அதிலும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது’ இந்தியா முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால், தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்கள் இன்று (பிப்.15) முதல் விநியோகம் செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அதன்படி திருப்பதி ஸ்ரீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை, கோவிந்தராஜ சுவாமி சத்திரம், பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் இன்று முதல், தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் விநியோகிக்கப்பட உள்ளன. தரிசனம் செய்வதற்கு முதல்நாள், பக்தர்கள் நேரிலேயே சென்று இந்த டோக்கனை பெற்றுக்கொள்ளலாம். முதலில் வருபவர்களுக்கு, முன்னுரிமை என்ற அடிப்படையில் டோக்கன்கள் வழங்கப்படும்.
இலவச தரிசன டிக்கெட்’ பெறுவதற்கு ஆதார் அட்டை, இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் அவசியம்.
டிக்கெட்டு வாங்கியவர்கள் நாளை காலை முதல் (பிப்.16) சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இந்த வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இந்த மாத இறுதிக்குள் தரிசன டிக்கெட்டுகளின் தினசரி ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. தற்போது ஒரு நாளைக்கு 30,000 முதல் 35,000 பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். சனிக்கிழமை 36,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“