கமல்ஹாசனை கொண்டாடும் இந்நேரத்தில் 'டிவி கமல்ஹாசனை' பலி கொடுத்துவிட்டோமே!!

டிவி சீரியல் நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதன் மர்ம முடிச்சு இன்று வரை அவிழக்கப்படாமலேயே இருக்கிறது. குறிப்பாக, தமிழ் டிவி நட்சத்திரங்களின் தற்கொலைகள் நம்மில் கனத்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

திறமையான பிரபல இளம் டிவி நடிகர் சாய் பிரஷாந்த்தை சின்னத்திரை உலகம் இழந்து நான்கு வருடமாகிவிட்டது. இப்போது எதற்கு இது? என்று நீங்கள் கேட்கலாம்.

சமீபத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடியதில் இருந்து, நேற்று நடந்து முடிந்த கமலின் 60 ஆண்டு திரைவாழ்க்கை நிறைவு விழா வரை, சூப்பர்ஸ்டார் உட்பட எண்ணற்ற நட்சத்திரங்கள் கமல்ஹாசனின் சாதனைகளை பட்டியலிட்டு வருகின்றனர். கேட்பதற்கு, நமக்கும் பெருமையாக உள்ளது.

அதேசமயம், கமல் முகத்தை டிவியில் பார்க்கும் போதெல்லாம், சாய் பிரஷாந்த்தின் முகம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

சாய் பிரஷாந்த் கமல்ஹாசனின் ஒரு தீவிர ரசிகர். வெறியர் என்றே சொல்லலாம். கமல்ஹாசனை போல தத்ரூபமாக மிமிக்ரி செய்வதில் கெட்டிக்காரர் இவர். தேவர் மகன், தசாவதாரம் உள்ளிட்ட பல படங்களில் கமல் பேசிய பிரபல வசங்களை அச்சு பிசகாமல் நண்பர்களிடம் பேசிக் காட்டுவதில் பிரஷாந்த்துக்கு எப்போதும் ஒரு மகிழ்ச்சி உண்டு.

விஜய் டிவியில் நடைபெற்ற பிரபல நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாய் பிரஷாந்த், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் வரும் ‘கலக்கப் போவது யாரு’ பாடலுக்கு கமல்ஹாசன் போன்றே தோற்றத்தை மாற்றிக் கொண்டு, நடனமாடினார்.

அவரது உயரம், உடல் வாகு என அனைத்தும் அச்சு அசல் கமல்ஹாசனாகவே அவரை நம் கண் முன்னே நிறுத்தியது. அதுவும், தனியாக கோரியோ செய்து கொள்ளாமல், படத்தில் கமல் பயன்படுத்திய அதே டான்ஸ் மூவ்மென்ட்களையே பிரஷாந்தும் பயன்படுத்தினார்.

இதற்காகவா இவரைப் பற்றி இப்போது பேச வேண்டும்? என்று நினைக்க வேண்டாம்… எண்ணற்ற இளம் டிவி சீரியல் நடிகர் நடிகைகளை காவு வாங்கிக் கொண்டிருந்த தற்கொலை எனும் கோர அரக்கன், மரணிப்பதற்கு முன்பு வரை சகஜமாக இருந்த சாய் பிரஷாந்த் உயிரையும் பறித்துக் கொண்டுச் சென்றது ஒட்டுமொத்த சின்னத்திரை உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


சினிமா நடிகர்கள் தற்கொலை என்பது அரிதாகவே நிகழும் ஒன்று. ஆனால், இவ்வளவு உயிர்கள் சின்னத்தியில் காவு வாங்கப்படுகிறது என்றால், அதை என்னவென்று எடுத்துக் கொள்வது?

வைஷ்ணவி, ‘லொள்ளு சபா’ ஷோபனா, ‘வம்சம்’ பிரியங்கா, சபர்ணா, ‘சுமங்கலி’ ஹீரோ பிரதீப் என்று இந்த லிஸ்ட் நீண்டுக் கொண்டே செல்கிறது. சமீபத்தில், இரு நடிகைகளின் கணவர்கள் தற்கொலை செய்து கொண்டது தனிக்கதை!.

2016ம் ஆண்டு தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து சாய் பிரஷாந்த், தனது தீராத மன உளைச்சளால் மரணித்துக் கொள்கிறேன் என்று எழுதிவைத்த கடிதம் மட்டுமே சிக்கியது.

இந்நேரம் உயிருடன் இருந்திருந்தால், எந்த உயரத்தில் இருந்திருப்பார் என்று தெரியாது. ஆனால், தான் பெரிதும் நேசிக்கும் கலைஞன் மற்றவர்களால் பெருமைப்படுத்துவதை எண்ணி எண்ணி மகிழ்ந்திருப்பார்.

நாம் ஆச்சர்யத்துடன் ரசிக்கும் நட்சத்திரங்களுக்குள் எத்தனை அமாவாசை இருட்டுகள்!!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close