இந்த மாதத்தின் இறுதியில் கொண்டாடப்படவுள்ள தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மார்ச் 30-ஆம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பான ஸ்ரீ விஷ்வவசு நாம யுகாதி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு மார்ச் 25-ஆம் தேதி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதற்காக பாரம்பரிய முறைப்படி அன்றைய தினம் கோயிலை சுத்தப்படுத்துவது வழக்கமான நடைமுறையாக கருதப்படுகிறது.
இதன் காரணமாக, அன்றைய தினம் காலை 6 மணி முதல் 10 மணி வரை நான்கு மணி நேரத்திற்கு அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவதையொட்டி மார்ச் 25-ம் தேதி அன்று நடைபெறவிருந்த அஷ்டதல பாத பத்மாராதனை சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி, யுகாதி அஸ்தனத்தை முன்னிட்டு மார்ச் 30-ம் தேதி அன்று தீப அலங்கார சேவை தவிர மற்ற அனைத்து விதமான ஆர்ஜித சேவைகளும் தேவஸ்தானம் நிர்வாகத்தால் ரத்து செய்யப்படுகிறது. மேலும், மார்ச் 25 மற்றும் மார்ச் 30 ஆகிய இரு தேதிகளும் வி.ஐ.பி பிரேக் தரிசனத்திற்கு, வி.பி.ஐ புரோட்டோகால் அடிப்படையில் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மார்ச் 24 மற்றும் மார்ச் 29 ஆகிய இரண்டு நாட்களும் வி.ஐ.பி தரிசனத்திற்காக பரிந்துரை கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. எனவே, இவற்றைக் கருத்திற் கொண்டு பக்தர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேவஸ்தானம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.