/indian-express-tamil/media/media_files/2025/07/29/body-skin-care-2025-07-29-11-46-27.jpg)
கற்றாழையுடன் தயிர் சேர்க்க கூடாது… முகத்தில் வறட்சி நீங்க இதை சேர்த்து அப்ளை பண்ணுங்க; டாக்டர் ஜெயரூபா
சருமப் பராமரிப்பு என்பது அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதுடன் நின்றுவிடுவதில்லை. நமது உடலின் தனித்துவமான அமைப்பு, தோஷங்களின் அடிப்படையில் சருமத்தைப் புரிந்துகொள்வது ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்தைப் பெற உதவும். ஆயுர்வேதத்தின்படி, நமது உடல் வாதம், பித்தம், கபம் என 3 தோஷங்களால் ஆனது. இந்த தோஷங்களின் சமநிலையே நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், சருமத்தின் தன்மையையும் தீர்மானிக்கிறது. ஒவ்வொரு தோஷ வகை சருமத்திற்கும் தனித்துவமான பண்புகளும், அதற்கேற்ற பராமரிப்பு முறைகளும் உள்ளன.
வாத தோஷ சருமம் அதிகமுள்ளவர்களுக்கு பொதுவாக வறண்ட, மெல்லிய, சுருக்கங்கள் நிறைந்த மற்றும் மந்தமான சருமம் இருக்கும். குளிர்காலத்தில் இது மேலும் மோசமடையலாம். இந்த வகை சருமத்திற்கு ஆழமான ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்து அவசியம் என்கிறார் டாக்டர் ஜெயரூபா. நெய், நல்லெண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் போன்ற ஈரப்பதமூட்டும் எண்ணெய்களைப் பயன்படுத்தி தினமும் சருமத்தை மசாஜ் செய்யுங்கள். இது சருமத்திற்கு நெகிழ்வுத்தன்மையை அளிக்கும். கற்றாழை ஜெல் மற்றும் பாசிப்பயறு மாவு அல்லது கடலை மாவை கலந்து பேஸ் பேக்காக பயன்படுத்தலாம். இது சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். வறட்சியை அதிகரிக்கும் என்பதால், தயிர் போன்ற பொருட்களை முகத்தில் பயன்படுத்துவதைத் தவிர்க்க அறிவுறுத்துகிறார் டாக்டர் ஜெயரூபா.
பித்த தோஷம் சருமம் நிறைந்தவர்களுக்கு சிறிது தடிமன் கொண்ட, முகப்பரு, வீக்கம், சிவத்தல் மற்றும் சூரிய ஒளிக்கு உணர்திறன் கொண்ட சருமம் இருக்கும். இவர்களுக்கு அரிப்பு மற்றும் எரிச்சல் அதிகமாக இருக்கும். இந்த வகை சருமத்திற்கு குளிர்ச்சியூட்டும் மற்றும் அமைதிப்படுத்தும் பொருட்கள் தேவை. சந்தனம், அதிமதுரம் மற்றும் மஞ்சிஸ்தா (இந்திய மந்தாரை) போன்ற குளிர்ச்சியூட்டும் மூலிகைகளைப் பயன்படுத்தலாம். சந்தனப் பொடியை பால் அல்லது ரோஸ் வாட்டருடன் கலந்து பேஸ் பேக்காகப் பயன்படுத்தலாம். இது சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் சிவத்தலைக் குறைக்கும். காரமான உணவுகள் மற்றும் அதிக சூரிய ஒளியைத் தவிர்க்கவும்.
கப தோஷ சருமம் உள்ளவர்களுக்கு எண்ணெய் பசையுள்ள, வீங்கிய மற்றும் பெரும்பாலும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் சருமப் பிரச்சனைகள் இருக்கும். இவர்களுக்கு துளைகள் பெரிதாகவும், கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகள் தோன்றவும் வாய்ப்புள்ளது. இந்த வகை சருமத்திற்கு எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும் மற்றும் சுத்தப்படுத்தும் பொருட்கள் தேவை. கடலை மாவு அல்லது பாசிப்பயறு மாவை தயிருடன் கலந்து பயன்படுத்தலாம். இது சருமத்தின் அதிகப்படியான எண்ணெயை குறைத்து சுத்தப்படுத்தும். துளசி போன்ற கபத்தை சமநிலைப்படுத்தும் கஷாயங்களை உட்கொள்ளலாம். வேப்பிலை அடிப்படையிலான முக க்ளென்சர்களைப் பயன்படுத்தலாம். கடலை மாவு அல்லது பாசிப்பயறு மாவை எலுமிச்சை சாறு அல்லது தயிருடன் கலந்து பேஸ் பேக்காகப் பயன்படுத்தலாம் என்கிறார் டாக்டர் ஜெயரூபா.
தோஷத்தின் அடிப்படையில் சருமப் பராமரிப்பைத் தேர்ந்தெடுப்பது, பக்கவிளைவுகளைத் தவிர்த்து, உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், இயற்கையாகவே பொலிவுடனும் வைத்திருக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.