/indian-express-tamil/media/media_files/2024/12/07/Ea3Hb9o8IcX0GvisnmAk.jpg)
கும்பகோணம் அருகே துக்காச்சியில் உள்ள ஸ்ரீஆபத்சகாயேஸ்வரா் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. Image Source: UNESCO
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே துக்காச்சி ஊராட்சியில் உள்ள ஸ்ரீ செளந்தா்யநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீஆபத்சகாயேஸ்வரா் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது கிடைத்திருப்பது அப்பகுதி மக்களை பெருமையாக உணரவைத்துள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், திருநாகேசுவரம் நாகநாத சுவாமி கோயிலின் உப கோயிலான ஸ்ரீ செளந்தா்யநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீஆபத்சகாயேஸ்வரா் கோயில் முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1100) - விக்கிரம சோழன் (கி.பி.1112) காலத்தில் கட்டப்பட்டது.
இந்த கோயிலுக்கு கடந்த ஆண்டு செப்டம்பா் 3-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, கோயில் திருப்பணி மற்றும் புனரமைப்பு மற்றும் புதுப்பித்தலின்போது ராஜகோபுரம், இரண்டாம்நிலை கோபுரம், அா்த்தமண்டபம், உள்பிரகாரம், அம்பாள் விமானம், துா்க்கை அம்மன் சந்நிதி மற்றும் சிற்பங்கள், கட்டட தொழில் நுட்பங்கள் அதன் தொன்மை மாறாமல் நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டன.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொன்மை மாறாமல் கும்பகோணம், துக்காச்சியில் உள்ள ஸ்ரீஆபத்சகாயேஸ்வரா் கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் தொன்மை மாறாமல் புதுப்பிக்கப்பட்டிருப்பது பாராட்டுகளைப் பெற்றது.
ஸ்ரீஆபத்சகாயேஸ்வரா் கோயிலை அதன் தொன்மை மாறாமல் புதுப்பித்து குடமுழுக்கு நடத்தியதால் யுனெஸ்கோவின் 2024-ம் ஆண்டிற்கான சிறப்பு விருதிற்கு (2024 - Award of Distinction) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
யுனெஸ்கோ விருதுக்கு தேர்வு செய்த நடுவர்கள் கும்பகோணம், ஸ்ரீஆபத்சகாயேசுவரா் கோயில் குறித்து குறிப்பிட்டுள்ளதாக யுனெஸ்கோ தளத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: “தமிழ்நாட்டின் ஆபத்சகாயேஸ்வரர் கோயிலின் புனரமைப்பு, முன்னர் கைவிடப்பட்ட மதத் தளத்திற்கு புதிய உயிர் கொடுத்துள்ளது, நவீன பாதுகாப்பு அறிவியலை பாரம்பரிய கட்டுமான நடைமுறைகளுடன் இணைக்கும் ஒரு இடைநிலை முறையைப் பயன்படுத்துகிறது. இந்த இதில் பொறியியல் நிபுணத்துவம் மற்றும் இந்து கோவில் கட்டுபவர்களின் அறிவாற்றல், ஸ்தபதி, உள்ளூர் கைவினைஞர் மரபுகளுக்கு ஏற்ப கட்டமைப்பு பாதுகாப்பு மற்றும் அலங்கார வேலைகளை புதுப்பித்தல் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்துக் கோவில்களை மீட்டெடுப்பதற்கான வழிகாட்டுதல்களை நிறுவுவதில் இத்திட்டத்தின் கல்வியியல் நோக்கங்கள் பாராட்டுக்குரியது. அரசாங்கம் மற்றும் பக்தர்களின் குறிப்பிடத்தக்க ஆதரவு இந்த வரலாற்று கோவிலின் தொடர்ச்சியை நவீன கால பக்தி சூழலில் செயல்படுத்தியுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளது.
கும்பகோணம் தாராசுரம் ஸ்ரீ ஐராவதேசுவரா் கோயில் ஏற்கெனவே 2004-ம் ஆண்டு யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. தற்போது ஆபத்சகாயேசுவரா் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களை பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர வைத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us