திருச்சி மாவட்டம், பொன்மலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள இளைஞர்கள் பலர் கட்டைபேட் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். பார்ப்பதற்கு பூப்பந்தாட்டம் போன்று தோன்றும் இந்த விளையாட்டை அப்பகுதியினர் உற்சாகமாக விளையாடுகிறார்கள்.
இந்த விளையாட்டு குறித்து ரயில்வே பணிமனையில் பணியாற்றுபவரும், சமூக ஆர்வலருமான நீலமேகம் கூறுகையில், "திருச்சி பொன்மலையில் வாழ்ந்த ஆங்கிலேயர்கள் ஓய்வு நேரங்களில் ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகளுடன் பூப்பந்தாட்டம் விளையாடுவார்கள். பந்துக்கான மட்டை நரம்பு வலையால் பின்னப்பட்டு இருக்கும். இதை பார்த்த இப்பகுதி மக்களும் இதனை விளையாடுவதில் ஆர்வம் கொண்டனர்
இந்த விளையாட்டை விளையாட ஆசைப்பட்டவர்களுக்கு தேவையான பேட் வாங்க பொருளாதாரம் இடம் தராததால் தோன்றிய யோசனை தான் கட்டை பேட். "கட்டை பேட்" முதலில் அட்டையை பேட்டாகவும், துணிகளை உருட்டி பந்தாகவும் பயன்படுத்த, நாளடைவில் மர பலகை, பிளைவுட் என உருமாற்றம் பெற்று இன்றளவும் திருச்சி பொன்மலை பகுதியை கலக்கி வருகிறது.
பொன்மலை ரயில்வே காலனியில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பு அருகிலும் கட்டை பேட் மைதானம் கட்டாயம் இருக்கும். இரவு-பகல் ஆட்டம், இருவர், ஐவர் அணிகள் மோதும் கட்டை பேட் விளையாட்டை நடத்த விளையாட்டு கிளப்களும் உண்டு. வெற்றிக்கான பரிசாக பெருந்தொகை வழங்கப்படுகிறது" எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து நடந்த போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
செய்தி - க.சண்முகவடிவேல்