யார் இந்த அனுதீப்... இந்திய அளவில் முதலிடம் பிடித்தது எப்படி?

அம்மா நான் முதலிடம் வந்ததைக் கேட்டவுடன் கண்ணீருடன் என்னை கட்டி அணைத்துக் கொண்டார்கள்.

ஐஏஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் தேர்வுகளின் முடிவுகள் நேற்று (27.4.18) மாலை வெளியாகின. இதில், தமிழகத்தை சேர்ந்த 50 மாணவர்கள் வெற்றி பெற்று தமிகத்தை தலை நிமிர வைத்துள்ளனர். அத்துடன், ஹதரபாத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் அனுதீப் துரிஷெட்டி இந்திய அளவில் முதலிடத்தை பெற்று அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளார்.

முடிவுகள் வெளிவந்த நேரத்தில் இருந்து தற்போது வரை கூகுளில் அனுதீப் குறித்த தேடல் அதிகரித்துள்ளது. இந்திய அளவில் முதலிடம் பிடிக்க எப்படி உழைத்திருக்க வேண்டும், எவற்றையெல்லம் தியாகம் செய்திருக்க வேண்டும் என்று பலரும் வியப்புடன் கேட்டு வருகின்றனர். “உழைப்புக்கு கிடைத்த வெற்றி” என்கிறார் அனுதீப். மெளனமாய் சிரித்துக் கொண்டே.. இதோ ஆங்கில நாளிதழான’ இந்தியன் எக்ஸ்பிரஸ்’க்கு அனுதீப் அளித்த பிரத்யேக பேட்டி உங்கள் பார்வைக்கு…

” இந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அப்படி ஒரு ஆனந்தம், பூரிப்பு, ஏக்கம், எதிர்ப்பார்ப்பு .. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். முதலிடம் பெற்றதைவிட என் எதிரில் இருக்கும் பொறுப்புகளே பெரிதாக தெரிகிறது. இந்த நேரத்தில் நான் கட்டாயமாக நன்றி சொல்ல வேண்டியது எனக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், நண்பர்கள் இவர்களுக்கு தான்.

அதிர்ஷ்டம் என்பதில் எனக்கு துளியளவு நம்பிக்கை இல்லை. கடின உழைப்பால் மட்டுமே இந்த இடத்தை பிடித்திருக்கிறேன். என் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் என் தந்தை கட்டாயமாக இருப்பார். இந்த வெற்றிக்கு பின்பும் முழுக்க முழுக்க அவரே உள்ளார். அவர் தான் என் ரோல் மாடல். இந்த தேர்வுக்கு நான் தயாராகும் போது என் முழு கவனமும் வெற்றி என்ற இலக்கை நோக்கி தான் இருந்தது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்ச்சியாளர்கள் பட்டியலில் தேர்வானவர்கள் மட்டும் தகுதியானவர்கள் கிடையாது. திறமையானவர்கள் பலருக்கும் இந்த முறை கைகொடுக்கவில்லை என்று தான் எண்ண வேண்டும். நான் அப்படி தான் பார்ப்பேன். தினசரி நான் படிக்கும் நேரத்தை தெளிவாக திட்டமிட்டுக்கொள்வேன்.

கடந்த 2013 ஆம் ஆண்டு, சிவில் சர்வீஸ் தேர்வுகளில் இந்திய வருவாய் சேவைக்கு தேர்வானேன்.தற்போது ஐதராபாத்தில் வருவாய்துறை உதவி ஆணையராக பதவி வகிக்கிறேன். இருந்தபோதும், வார இறுதியில் கட்டாயமாக படிப்பதை தவற மாட்டேன். கடின முயற்சியும், தொடர் உழைப்பும் பலன் தருவது உறுதி என்று என் தந்தை அடிக்கடி கூறுவார். அதுதான் இப்போது என் வாழ்வில் நடந்துள்ளது.

அதற்கென்று எப்போதும் படிப்பு, படிப்பு என்றெல்லாம் இருக்க மாட்டேன். எனக்கும் நண்பர்கள் உண்டு, கிரிக்கெட் பார்ப்பேன், கால்பந்து விளையாடுவேன். ஆனால் எப்போது படிக்க வேண்டுமோ அப்போது படித்து விடுவேன்.

என்னுடைய அம்மா நான் முதலிடம் வந்ததைக் கேட்டவுடன் கண்ணீருடன் என்னை கட்டி அணைத்துக் கொண்டார். எங்கள் உழைப்பிற்கு எல்லாம் பலன் கிடைத்து விட்டது என்றார். அப்போது தான் எனக்கு தோன்றியது ஒரு மகனாக அவர்களை கட்டாயம் பெருமைப்படுத்தி விட்டேன் என்று.

என் அப்பா, தெலங்கானாவில் உள்ள மலைக் கிராமத்தை சேர்ந்தவர். அவரின் நீண்ட நாள் ஆசை,  என்னை இதுப்போல் பார்க்க வேண்டும் என்பதே. அவருடைய உழைப்பு தான் எனக்கு கல்வியை தந்தது. அவரின் உறுதுணை தான் எனக்கு இப்போது வெற்றியையும் தந்துள்ளது” என்று கடைசி வரை தன் வெற்றியை தனது குடும்ப வெற்றியாகவே பதிவு செய்து முடிகிறார் அனுதீப் துரிஷெட்டி.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close