சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி வைரலாகப் பரவி வருகிறது. அதில் ஒரு குழந்தையை முறத்தில் போட்டு தானியங்கள் புடைப்பது போலச் செய்யும் செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் காணொளியின் உண்மைத்தன்மை மற்றும் அதன் பின்னணியில் உள்ள மூடநம்பிக்கைகள் குறித்து தன் யூடியூப் வீடியோவில் விளக்குகிறார் டாக்டர் அருண்குமார்.
Advertisment
"உரம் எடுப்பது" என்றொரு முறை அந்தக் காலத்தில் இருந்துள்ளது. குழந்தைகள் பயங்கரமாக அழும்போது, குறிப்பாக கழுத்து அல்லது காதுப் பகுதியைத் தொட்டால் இன்னும் அதிகமாகக் கத்தினால், அவர்களுக்கு எண்ணெய் தடவி, கழுத்து மற்றும் காதுப் பகுதியில் மெதுவாக நீவி விட்டு, பின்னர் ஒரு வேட்டி அல்லது புடவையில் குழந்தையை வைத்து மெதுவாக அசைத்துள்ளனர். இதையே "உரம் எடுப்பது" என்று கூறியுள்ளனர். இதற்கு அந்த ஊர்களில் நிபுணர்களும் இருந்துள்ளனர்.
இருப்பினும், அறிவியல் பூர்வமாக "உரம் எடுப்பது" என்பதற்கு எந்தப் பயனும் இல்லை. குழந்தைகள் கழுத்து அல்லது காதுப் பகுதியைத் தொடும்போது அழுவதற்கு முக்கிய காரணம், காது வலி எனப்படும் ஆர்ட்டிஸ் மீடியா (Otitis Media). இது சாதாரணமாக சளி சரியாகும்போதும் அல்லது காதிலிருந்து லேசாக நீர் வடிந்து தானாக ஒரு நாளில் சரியாகிவிடும். தேவைப்பட்டால் மருந்துகளும் கொடுக்கலாம். ஆகையால், "உரம் எடுப்பது" என்பது அறிவியல் ரீதியான ஒரு சிகிச்சை முறை அல்ல.
மூடநம்பிக்கையும், சாங்கியமும்
Advertisment
Advertisements
பலரிடம் விசாரித்ததில், இந்தக் காணொளியில் நடப்பது "உரம் எடுப்பது" அல்ல, இது ஒரு ஐதீகம் என்று தெரியவந்துள்ளது. ஒரு சில வீடுகளில் மூன்று அல்லது நான்கு குழந்தைகள் அடுத்தடுத்து இறந்துவிட்டால், அடுத்து பிறக்கும் குழந்தையை முறத்தில் வைத்துப் புடைத்து, குப்பைத் தொட்டியிலிருந்து எடுத்து வந்தது போல ஒரு சாங்கியம் செய்வார்களாம். அதன் பிறகு, அக்குழந்தைக்கு குப்பன் போன்ற பெயர்களைச் சூட்டி, "குப்பைத் தொட்டியில் இருந்து எடுத்த குழந்தை; ஆகையால் கண்ணு படாது" என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்வார்களாம். காணொளியில் நடப்பது இந்த ஐதீகமே என்று பெரியவர்கள் பலர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இன்றைய சூழலில் இதன் அவசியம் என்ன?
இந்த ஐதீகம் மற்றும் சடங்குகள் இன்றைய நவீன மருத்துவ வசதிகள் நிறைந்த காலத்தில் தேவையில்லாதவை. அந்தக் காலத்தில் சிசு மரண விகிதம் அதிகமாக இருந்ததற்கு முக்கிய காரணம், தடுப்பூசிகள் இல்லாததும், நிமோனியா, வயிற்றுப்போக்கு போன்ற சிறிய நோய்களாலேயே குழந்தைகள் இறந்ததும் ஆகும். ஆனால், இன்றைய நவீன மருத்துவ வசதிகளின் முன்னேற்றத்தால், பிறந்த குழந்தைகள் மூன்று, நான்கு என இறப்பது என்பது கேள்விப்படாத விஷயம். எனவே, இந்த ஐதீகங்கள் இப்போது முற்றிலும் அவசியமற்றவை.
அதுமட்டுமின்றி, குழந்தைகளை இப்படி முறத்தில் வைத்துப் புடைப்பது அவர்களுக்குத் தலையில் அடிபடுவது போன்ற ஆபத்துகளை விளைவிக்கலாம். நவீன மருத்துவ வளர்ச்சியால், மூன்று, நான்கு குழந்தைகள் இறப்பது போன்ற பிரச்சினைகள் நம் நாட்டில் இல்லை. இதை நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். இந்தக் காணொளியில் காணப்படும் "புடைக்கும்" சடங்கு போன்ற தேவையற்ற விஷயங்களை ஆதரித்து கருத்துகள் பகிர வேண்டாம்.