ஆடை அளவுகளில் இந்திய "முத்திரை". அமெரிக்க, ஐரோப்பிய தரத்துக்கு "குட் பை!"

கடையில் அளவு வாரியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதிலிருந்து எடுத்துத் தருவார்கள்.

ஆயத்த ஆடை அணிபவரா நீங்கள்?

அப்படியானால், ஜீன்ஸ், பேண்ட், டி சர்ட் போன்றவை வாங்கச் சென்றபோது உங்களுக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும்!

குறைந்தபட்சம், உள்ளாடைகள் வாங்கும்போதாவது, “உங்களது சைஸ் என்ன?” என்ற கேள்வியைச் சந்தித்திருப்பீர்கள். நீங்கள் சொல்லும் சைஸ்ஸைப் பொறுத்து, கடையில் அளவு வாரியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதிலிருந்து எடுத்துத் தருவார்கள்.

அப்படி கடைகளில், ஒரு குறிப்பிட்ட அளவு என அடுக்கி வைக்கப்பட்டுள்ளதிலேயே வெவ்வேறு எண்கள், குறியீடுகள் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா….? உண்மை. காரணம், அவற்றில் ஒரு சில அளவுகள், ஐரோப்பிய சந்தையில் கடைபிடிக்கப்படுபவை. மற்றவையோ, அமெரிக்காவில் வழக்கத்தில் இருப்பவை. உலகின் மிகப் பெரிய நுகர்வு சந்தையாக உள்ள நமது நாட்டுக்கென, நமது மக்களது உடல் அமைப்பைப் பொறுத்து… அங்கிகரிக்கப்பட்ட நிலையான அளவுகள் இன்னும் வரவில்லை; இந்திய அளவுகள் இதுவரை தரநிலைப்படுத்தப்படவில்லை. அதற்கான வேலை இப்போது தொடங்கியுள்ளது.

மத்திய அரசின் சில திட்டங்கள் போலவே, இதுவும் இந்தியாவின் பெயரில் குறிப்பிட்டு, “சைஸ் இந்தியா” என, நாடு தழுவிய ஒரு சர்வேவாக நடக்க இருக்கிறது. மத்திய ஜவுளித் துறையின் கீழ் நடக்க உள்ள இந்த முயற்சியில் இந்தியர்களின் ஆடை – ஆயத்த ஆடை, உள்ளாடை, செருப்பு உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் – அளவைச் சொல்லி வாங்கிப் பயன்படுத்தும் வகையில் நிலையான, தரப்படுத்தப்பட்ட அளவீடுகள் உருவாக்கப்பட உள்ளன.

இதற்காக ஆண்கள், பெண்கள் என, பல்வேறு வயதினர், பல்வேறு ஊர்களில், பல்வேறு பின்னணியில் இருந்து தேர்வு செய்யப்பட்டு, அவர்களை அழைத்து மாதிரிகளாக வைத்து, அவர்களது உடல் வடிவமைப்பை, முழு அளவில் முப்பரிமாண அளவுகளாகப் பெற்று இந்தியாவுக்கென ஒரு தனி தரப்படுத்தப்பட்ட அளவை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, குறைந்தது 25 ஆயிரம் பேரை மாதிரிகளாக அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனிடம் கிட்டத்தட்ட 120 விதமான அளவுகளை எடுத்து, அவை பதிவு செய்யப்படுமாம். இந்தியா – ஒரு பரந்து விரிந்த நாடு என்பதால், இந்தியாவுக்கான நிரந்தர தர அளவு என்பது எல்லா தரப்பு மக்களையும் உள்ளடக்கியமதாக இருக்க வேண்டும் என்பதால், வடகிழக்குப் பகுதி உட்பட, காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரையான நிலப்பகுதியில் உள்ள மக்கள் வரை என, பல தரப்பில் இருந்து இந்த சாம்பிள் மனிதர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

இந்த மாதிரி தேர்வும், அவர்களுக்கு அளவு எடுக்கும் முடிவும் 2 கட்டங்களாக நடைபெறும் எனத் தெரிகிறது. முதல் முயற்சியில் 15 வயது முதல் 65 வயது வரையுள்ளவர்கள் மாதிரிகளாக அழைக்கப்படுவார்கள். அதன் பின்னர் இதே வகையான முயற்சி இந்திய குழந்தைகளுக்கும் செய்யப்பட்டு அந்த அளவும் தரநிலைப்படுத்தப்படும். அப்போது காலணிகளுக்குமான இந்திய தரநிலையும் வடிவம் பெறும் எனக் கூறப்படுகிறது.

இந்த பணியை மத்திய ஜவுளித்துறை தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி வசம் ஒப்படைத்துள்ளது. அதனால் கொல்கத்தா, மும்பை, புது தில்லி, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் ஷில்லாங் என 6 இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் மாதிரிகளை வரவழைத்து அளவு எடுக்கும் வேலையைச் செய்யும். இதற்காக அந்தந்த ஊர்களில் உள்ள அதி நவீன ஸ்கேனர்கள் ஒரு மனிதரை ஸ்கேன் செய்து முடிக்க 15 நிமிடங்களை எடுத்துக் கொள்ளும் எனச் சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இந்த முயற்சி 2021ம் ஆண்டு நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தற்போது 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, பன்னாட்டு நிறுவனங்களில் இந்தியர்களைக் குறி வைக்கும் ஜாம்பவான் நிறுவனங்களை துணைக்கு அழைத்துக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பக் கல்விக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பார்க்கலாம்….. ஐரோப்பிய, அமெரிக்க ஆடை அளவுகளில் இருந்து இந்திய தரநிலைக்கு மாறுவதால் என்ன மாற்றம் வரப் போகிறது என்பதை!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

×Close
×Close