Some Prgenancy tips: கோடைக்காலம் என்றாலே வெயில் புழுக்கம், வியர்வை என ஒவ்வொன்றையும் சமாளித்து ஆக வேண்டும். அதுவும் கர்ப்பிணிகளுக்கு இன்னும் சிரமமாக இருக்கும்.
கர்ப்பமடைந்த பெண்களுக்கு பொதுவாகவே வாந்தி மயக்கம் இருக்கும்.கோடையில் வியர்வை மூலம் நீர்ச்சத்து வெளியேறினால், சோர்வு ஏற்பட்டு விடுவதுடன், வயிற்றில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.எனவே, அதற்கு ஈடுகொடுக்கும் வகையில், கோடையில் நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளுக்கு கர்ப்பிணி பெண்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.
இதுபற்றி மகப்பேறு மருத்துவர் டாக்டர் பிரதிமா ரெட்டி கூறுகையில், ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது, அவளது உடல் குழந்தைக்கு இடமளிக்க தனித்துவமான மாற்றங்களைச் சந்திக்கிறது. மேலும் இந்த மாற்றங்கள் சில கர்ப்பிணி தாய்க்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். கோடையால் வெப்பநிலை அதிகரிப்பது நிலைமையை மோசமாக்கும் என்கிறார்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள்
- கர்ப்பத்தின் ஆரம்பத்தில் குமட்டல் மற்றும் வாந்தி
- அஜீரணம், வாயு, வீக்க உணர்வு மற்றும் பசியின்மை
- கர்ப்ப காலத்தின்போது உடல் எடை 10-12 கிலோ அதிகரிக்கும்
- Oedema —கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு கால்களில் வீக்கம்
- வளர்ந்து வரும் கருப்பையின் காரணமாக மூச்சுத் திணறல்
- சூடாக உணருதல்
கோடையைச் சமாளிக்க கர்ப்பிணிகள் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என பார்க்கலாம்..
- ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீரைக் குடிக்கவும். இளநீர் மற்றும் பழச்சாறுகளுடன் (உங்களுக்கு கர்ப்பகால நீரிழிவு இருந்தால் தவிர்க்கவும்) குறைந்த சர்க்கரை அல்லது சர்க்கரை இல்லாமல் குடிக்கவும்.
- உங்கள் உணவில் ஏராளமான காய்கறிகள், கீரைகள், முளைகட்டிய சாலடுகள், பழங்கள் (குறிப்பாக தர்பூசணி) சேர்த்துக்கொள்ளுங்கள். தயிர் மற்றும் மோர் குளிர்ச்சியை தரும். உணவில் அதிகப்படியான எண்ணெய், நெய் மற்றும் மசாலாக்களைத் தவிர்க்கவும், உப்பு சேர்த்துக்கொள்வதை குறைக்கவும்.
- நீச்சல் / உடற்பயிற்சி இது குளிர்ச்சியடைய ஒரு சிறந்த வழியாகும். வெப்பநிலை குறைவாக இருக்கும்போது காலை அல்லது மாலை வேளைகளில் வழக்கமான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- உங்கள் கால்களை தலையணை அல்லது குஷன்கள் மீது வைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், காரணம் அது உங்கள் கால் மற்றம் பாதங்களில் உள்ள நீர் இருப்பை குறைக்கும்.
- கோடைக்காலத்தில் ஆடைகள் விஷயத்திலும் கர்ப்பிணிகள் சற்று கவனமாக இருக்க வேண்டும். பருத்தி போன்ற காற்றோட்டமான ஆடைகளைத் தேர்வுசெய்து அணிய வேண்டும். உள்ளாடைகளையும் பருத்தியில் தேர்ந்தெடுத்து அணிவதால் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கமுடியும். . கால் வீக்கத்திற்கு ஏற்ப வசதியான பாதணிகளை அணியுங்கள்.
- கர்ப்ப காலத்தில் சீக்கிரமாக நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டுவிடும் என்பதால், மதிய வேளைகளில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை வெளியே செல்ல நேர்ந்தால் கையில் தண்ணீர் பாட்டில் எடுத்துச்செல்ல வேண்டும். வெளியே செல்லும் போது சன்கிளாஸ், குடை, தொப்பி பயன்படுத்துங்கள். வெகு நேரம் பயணம் செய்ய நேர்ந்தால் சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.
- வெயில் காலம் என்பதால் மதியம் குறைந்தது 30 நிமிடங்கள் தூங்க முயற்சிக்கலாம்.
இவை தவிர வழக்கமானவிட ஏதேனும் உடலில் மாற்றங்கள் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அதிக சோர்வு, வேகமான இதய துடிப்பு, தலைச்சுற்றல், வாந்தி அல்லது வியர்க்கவில்லை என்றால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் .இவை வெப்ப பக்கவாதத்தின் அறிகுறிகளாக இருக்கலாம் என மருத்துவர் எச்சரித்துள்ளார்.கோடை துவங்கிவிட்டதால் கர்ப்பிணி பெண்கள் மிகவும் கவனமாக தங்களை பார்த்துக்கொள்ள வேண்டும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.