உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் முதலிரவுக்கு சென்ற மணமகனும், மணமகளும் மறுநாள் காலையில் இறந்து கிடந்த ஒரு வினோதமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் மே 30 அன்று நடந்த நிலையில், அவர்கள் இருவரும் மாரடைப்பால் இறந்துவிட்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் காட்டுவதாக போலீஸ் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
பிரதாப் யாதவ், (22) புஷ்பா யாதவ், (20) இருவரும், பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள கைசர்கஞ்ச் தாலுகாவில் மே 30 அன்று திருமணம் செய்து கொண்டனர்.
அடுத்த நாள், அனைத்து சடங்குகளையும் முடித்து, இருவரும் மே 31 அன்று மணமகன் வீட்டிற்குத் திரும்பினர். அன்று கிட்டத்தட்ட இரவு 11 மணியளவில் புதுமணத் தம்பதிகள் தங்கள் அறையில் தூங்கச் சென்றனர்.
ஜூன் 1 வியாழன் அன்று மணமக்கள் யாரும் நீண்ட நேரமாக அறையை விட்டு வெளியே வராததால், குடும்பத்தினர் பதற்றமடைந்தனர். அவர்கள் அறையின் கதவைத் தட்டினார்கள், ஆனால் எந்த பதிலும் வரவில்லை. இது குடும்பத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியது, எனவே கதவை உடைக்க முடிவு செய்தனர்.
அப்போது புதுமணத் தம்பதிகள் சடலமாக கிடப்பதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்களின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் சில நிமிடங்களில் சோகமாக மாறியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பஹ்ரைச் காவல் கண்காணிப்பாளர் பிரசாந்த் குமார் கூறுகையில், கணவன்-மனைவி இருவரும் மாரடைப்பால் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடவியல் நிபுணர்கள் குழு தம்பதியரின் அறையை ஆய்வு செய்ததில் அறையில் காற்றோட்டம் இல்லாதது கண்டறியப்பட்டது. மின்விசிறி மற்றும் காற்று சுழற்சி இல்லாததால், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை தூண்டியிருக்கலாம்.
அறைக்குள் யாரோ வலுக்கட்டாயமாக நுழைந்ததற்கான அறிகுறிகள் அல்லது தம்பதியரின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை.
அதே நேரத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டதற்கான பிரேத பரிசோதனை அறிக்கை சில அச்சங்களை எழுப்பியுள்ளது. தம்பதிகள் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு செய்த ஒவ்வொரு காரியத்தையும் நாங்கள் இப்போது தயார் செய்கிறோம். புதன் கிழமை என்ன சாப்பிட்டார்கள் என்பதையும் பட்டியலிடுகிறோம் என்றும், குமார் கூறினார்.
இரு உடல்களின் உள்ளுறுப்புகளும் லக்னோவில் உள்ள மாநில தடய அறிவியல் ஆய்வகத்தில் பரிசோதனைக்காக பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும் குடும்பத்தினரிடம் இருந்து எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை, என்றார்
கைசர்கஞ்சில் உள்ள கோதியா கிராமத்தைச் சேர்ந்த கிராமத் தலைவர், பல்ராம் யாதவ் கூறுகையில், பிரதாப் கிராமத்தில் கூலி வேலை செய்து வந்தார். அதே சமயம் புஷ்பாவும் அதே பொருளாதார வகுப்பைச் சேர்ந்தவர். இது ஒரு நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.