திருப்பதியில் வரும் ஜனவரி 9-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பெருமாள் கோயில்களில் பிரசித்தி பெற்ற நிகழ்வாக வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுவது வழக்கம். இந்நேரத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படும்.
அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 10-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, திருமலையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதன்படி, ஜனவரி 10 முதல் 19-ஆம் தேதி வரை 10 நாள்கள் பக்தர்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன்னேற்பாடு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
10 நாள்களும் வைகுண்ட துவார தரிசனம் வழியாகச் சென்று சாதாரண பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முன்னுரிமை தரப்படும் எனவும் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாதாரண பக்தர்களுக்கு அதிக தரிசனத்தை வழங்க டிக்கெட் ஒதுக்கீடு மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து இன்னும் 2 வாரங்களில் மற்றொரு ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி நடைபெறும் நாள்களான, ஜனவரி 9-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. ஜனவரி 10-ஆம் தேதி தங்கத் தேரோட்டம் மற்றும் 11-ஆம் தேதி சக்கர ஸ்நானம் நடைபெறும் என அதிகாரிகள் கூறுகின்றனர். வழக்கமாக மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறையின் 11-ஆம் நாள் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. குறிப்பிட்ட நாளில் பெருமாளின் வைகுண்ட கதவுகள் திறக்கப்படுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். அதற்கு முந்தைய நாளில் இரவு முழுவதும் விழித்திருந்து, பெருமாள் துதி பாடுவதை பக்தர்கள் கடைபிடிப்பார்கள்.
ஒவ்வொரு கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசியை வெவ்வேறு விதமாக கொண்டாடுகின்றனர். சில கோயில்களில் ஏகாதசிக்கு முந்தைய 10 நாள்களில் பகல் பத்து எனவும், பிந்தைய நாள்களில் இராப்பத்து எனவும் விழா நடத்துகின்றனர். மேலும், திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கராத சாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா 21 நாள்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“