பெருமாளுக்கு உகந்த விரதங்களில் முதன்மையானது ஏகாதசி விரதம். மார்கழி மாதத்தில் வரும் இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பவர்கள் அரசர்கள் செய்யும் அஸ்வமேத யாகம் செய்த பலனை பெறலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!<>/strong
ஏகாதசி என்றால் என்ன?
ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில் 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிப்பது ஆகும். இந்த நாட்கள் பொதுவாகத் திதி என்று அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி என்கின்றனர். ஏகாதச எனும் வடமொழிச் சொல்லுக்கு 11 எனப் பொருள். காலக்கணிப்பில் 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பதினோராவது நாளாக வருவதால் இந்த நாள் ஏகாதசி என்ற பெயரால் அழைக்கப்பட்டது.
சந்திரனை அடிப்படையாகக் கொண்ட காலக் கணிப்பில் 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதம் ஒன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பதினோராம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருஷ்ண பட்சம் எனப்படும். தேய்பிறைக் காலத்தின் பதினோராம் நாளுமாக இரண்டு முறை ஏகாதசித் திதி வரும்.
அமாவாசையை அடுத்துவரும் ஏகாதசியைச் சுக்கில பட்ச ஏகாதசி என்றும், பூரணையை அடுத்த ஏகாதசியைக் கிருஷ்ண பட்ச ஏகாதசி என்றும் அழைக்கின்றனர்.
ஏகாதசி தோன்றிய புராணம்
ஏகாதசி பற்றி புராணங்கள் பல்வேறு கதைகளை கூறுகின்றன. அவற்றில் ஒன்று, புராணத்தில் முரன் என்னும் அசுரன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான். இதனால், அவர்கள் அனைவரும் அசுரை அழித்து தங்களை காக்குமாறு சிவபெருமானை வேண்டினர். சிவபெருமான் அவர்களிடம் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிடுமாறு கூறுகிறார். அதன்படி தேவர்களும் முனிவர்களும் மகாவிஷ்ணுவை சரணடைந்தனர்.
தேவர்களையும் முனிவர்களையும் காப்பதாகக் கூறிய மகாவிஷ்ணு அசுரன் முரனோடு போர் புரியத் தொடங்கினார்.
இருவருக்கும் இடையே நடைபெற்ற கடுமையான போர் 1000 ஆண்டுகள் நீடித்தது. இதனால், மிகவும் களைப்படைந்த மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.
அந்த நேரத்தை தனக்கு சாதகமாகப் பயண்படுத்திக்கொள்ள நினைத்த அசுரன் முரன் மகாவிஷ்ணுவை கொல்லத் துணிந்தான். அப்போது போது, அவரிடமிருந்த சக்தியானது ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. அந்த பெண்ணை அசுரன் முரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.
நித்திரையில் இருந்து விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட மகாவிஷ்ணு, அந்த சக்திக்கு ஏகாதசி எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார்.
ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து மகாவிஷ்ணுவின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப் பெற்று நலமாக வாழ்வோம் என்பது ஐதீகம்.
ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பது எப்படி?
ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பது ‘அஸ்வமேத யாகம்’ செய்த பலனை கொடுக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. மேலும், இத்தகைய வைகுண்ட ஏகாதசியை விட சிறந்த விரதம் இல்லை என்று புராணங்கள் கூறுகின்றன.
வைகுண்ட ஏகாதசி
மாதத்திற்கு இரண்டு ஏகாதசிகள் என ஒரு ஆண்டில் மொத்தம் 24 ஏகாதசிகள் உள்ளன. ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு கதை இருக்கிறது. இவற்றில் மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசியான, ‘வைகுண்ட ஏகாதசி’ மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை ‘மோட்ச ஏகாதசி’ என்றும் அழைக்கின்றனர். அதனால்தான், ஏகாதசி அன்று புகழ்பெற்ற பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் என்று கூறபடுகிற சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஏகாதசி விரதம் இருக்க விரும்புபவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமி அன்று, ஒரு வேளை உணவு மட்டுமே உண்ண வேண்டும். அடுத்த நாள் ஏகாதசி அன்று முழு நாளும் விரதம் இருந்து விஷ்ணுவை நினைத்து தியானிக்க வேண்டும். மகாவிஷ்ணு பெருமாளின் புகழ்பாடும் பிரபந்தப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். ஏகாதசி அன்று இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து இறைவனை துதி செய்ய வேண்டும். பிறகு மறுநாள் காலை துவாதசி அன்று, மகாவிஷ்ணு பெருமாளின் நாமத்தை சொல்லியபடி துளசி தீர்த்தத்தை அருந்தி விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.
தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய மூன்று நாட்களும் விரதம் இருப்ப வர்களின் சிந்தனையில், இறைவனின் நினைப்பு மட்டுமே இருக்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் தங்கள் பணிகளைச் செய்யும் வேளைத் தவிர மற்ற நேரங்களில் இறைவனின் புகழை பாடியபடியே இருக்க வேண்டும்.
ஏகாதசி அன்று பெருமாள் கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். அல்லது அவர்கள் வீட்டில் இருந்தபடியே பகவானின் படத்திற்கு மலர் அலங்காரம் செய்து வழிபாடு செய்யலாம்.
பக்தர்கள் இந்த வழிபாட்டை மூலமாக தீராத நோய்கள் அகலும், சகல செல்வங்களும் உண்டாகும். பகைவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆவார்கள். மேலும் முக்திக்கான வழியை அடைவார்கள்.
அதனால், அனைவரும் ஏகாதசி விரதம் இருந்து பெருமாளின் அருளைப் பெற்று வாழ்வில் ஏற்றம் காணுங்கள்.