வாழையின் அனைத்து பகுதிகளையும் சமைத்து உண்ணலாம். சத்து நிறைந்துள்ளது. வாழைப் பழம் அப்படியே சாப்பிடலாம். வாழை இலை சாப்பிடப் பயன்படுத்தலாம். வாழைத் தண்டு, வாழைப் பூ பொரியல் செய்து சாப்பிடலாம். அந்த வகையில் வாழைப் பூ வைத்து சுவையான குழம்பு செய்யலாம்.
தேவையான பொருட்கள்
வாழைப் பூ – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
கெட்டியான தேங்காய் பால் – 1 கப்
புளி – சிறிதளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்
சீரக தூள் – 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
முதலில் வாழைப் பூவை சுத்தம் செய்து எடுத்து அதை நறுக்காமல், அப்படியே மோரில் ஊற வைக்கவும். இப்போது அடுப்பில் குக்கர் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் மற்றும் கறிவேப்பிலையைப் போட்டு தாளிக்க வேண்டும். பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
பின் அதில் மஞ்சள் தூள், சீரகத் தூள், மல்லித் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போக 2-3 நிமிடம் வதக்கவும். பிறகு தீயை ஸ்லோ செய்து வாழைப் பூவை சேர்த்து நன்கு 3-4 நிமிடம் கிளறி உப்பு சேர்க்கவும். மசாலாக்கள் வாழைப்பூவுடன் ஒன்று சேரும் வரை பிரட்டி விட்டு, 1/2 கப் நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
இப்போது புளி கரைத்து இதில் ஊற்றவும். சில நிமிடங்கள் கழித்து கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க விடவும். 1 கொதி வந்ததும் குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்கவும். அவ்வளவு தான் சுவையான செட்டிநாடு ஸ்டைல் வாழைப்பூ குழம்பு ரெடி. சுடு சோற்றுடன் வைத்து சாப்பிட அருமையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“