வாழைப்பூ சத்து நிறைந்தது. உடலுக்கு வலிமை தரக்கூடியது. அதில் பொறியல், சூப் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் பெரும்பாலும் குழம்பு செய்வது குறித்து நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். அந்த வகையில் இங்கு செட்டிநாடு ஸ்டைல் சுவையான கிரேவி செய்து குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வாழைப்பூ - 1
சின்ன வெங்காயம் - 5
காய்ந்த மிளகாய் - 5
பூண்டு பல் - 5
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு
புளி - சிறிதளவு
உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயம், வாழைப்பூ, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். தனி பாத்திரத்தில் புளியை தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
தற்போது மிக்ஸி ஜார் ஒன்று எடுத்து அதில் காய்ந்த மிளகாய், பூண்டு பல், சீரகம் ஆகியவற்றை சேர்த்து பொடியாக அரைத்து, தனியே எடுக்கவும். கிரேவி செய்ய, கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் எண்ணெய் நன்கு காய்ந்ததும் இதில் சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இதில் வாழைப்பூ, உப்பு, கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்த மசாலா சேர்த்து 5 - 7 நிமிடத்திற்கு வதக்கவும். அடுத்து இதில் புளி கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
கிரேவி நன்கு கொதித்து வந்ததும் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். அவ்வளவு தான் சுவையான வாழைப்பூ கிரேவி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“