வால்பாறை ஆனைமலை பகுதியில் வனவிலங்குகள் கழிவில் பாலித்தீன் கவர்கள் இருப்பதை கண்டு விலங்கு நல ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Advertisment
கோவை மாவட்டத்தில் வால்பாறை, ஆனைமலை ஆகிய பகுதிகள் முக்கிய சுற்றுலாத் தலங்களாக விளங்கி வருகிறது. இங்கு தேயிலை தோட்டம் அதிகளவில் காணப்படுகின்றன.
மலைப்பகுதி என்பதால் யானைகள், காட்டுமாடுகள், வரையாடுகள், சிறுத்தை, குரங்குகள் என வனவிலங்குகள் அதிகம் காணப்படும் பகுதிகளாகவும் இருந்து வருகிறது.
இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் வழி நெடுகிலும் புகைப்படங்கள் எடுப்பது சிற்றுண்டி உண்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அதே சமயம் சாப்பிட்ட பிறகு பாலித்தீன் கவர்களை அப்படியே வீசி சென்று விடுகின்றனர்.
இதனால் உணவு தேடி செல்லும் விலங்குகள், அந்த பாலித்தீன் கவர்களையும் உண்டு விட நேர்ந்து விடுகிறது. இது விலங்குகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கிறது.
இதுகுறித்து விலங்கு நல ஆர்வலர்கள், வனத்துறையினர், வனவிலங்கு மருத்துவர்கள் பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்டம் அருகில் கிடந்த யானை சானத்தில் பாலித்தீன் கவர்கள் இருந்துள்ளன. இது விலங்கு நல ஆர்வலர்கள் இடையேயும் சமூக நல ஆர்வலர்கள் இடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே சுற்றுலா பயணிகளோ அல்லது அப்பகுதி மக்களோ இதுபோன்று பாலித்தீன் கவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை போடுவதை தடுக்க வனத்துறையினர் வால்பாறை நகராட்சி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“