பல மொழிகளின் ராணியாகவும், காந்த குரலுக்கு சொந்தகாரருமான பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று (பிப்ரவரி 4) காலமானார். அவருக்கு வயது 78. அவரது இசை சாதனையை போற்றும் வகையில் அண்மையில் இந்திய அரசு அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒன்று, இரண்டு மொழியல்ல 19-க்கும் மேற்பட்ட மொழிகளில் 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் இதயங்களில் சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். மல்லிகை என் மன்னன் மயங்கும், ஏழு ஸ்வரங்களுக்குள், மானஸ ஸஞ்சரரே பாடல்கள் இன்றவும் பல்வேறு வீடுகளில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றன. வாணி ஜெயராமின் குரலை ரசிக்காதவர்கள் இங்கு உண்டோ?
கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட வாணி ஜெயராம் 1945-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி வேலூர் மாவட்டத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே இசை மீது ஆர்வம் கொண்டவர். லதா மங்கேஷ்கர், முகமது ரவி, மன்னா டே ஆகியோரின் பாடல்களை கேட்டு இசை ஆர்வத்தை வளர்த்தவர். முறைப்படி கர்நாடக இசை கற்றுத் தேர்ந்தார்.
சென்னையில் ராணி மேரிக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். பின்னர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை கிடைத்து பணிபுரிந்தார். திருமணத்திற்கு பிறகு பணி மாறுதல் பெற்று மும்பை சென்றார். தொடர்ந்து இசையில் நாட்டம் கொண்டிருந்தார். வாணியின் இசை ஆர்வத்திற்கு கணவர் ஜெயராம் உறுதுணையாக இருந்தார். உஸ்தாத் அஹ்மத் கானிடம் வாணி இந்துஸ்தானி இசை கற்றுக் கொண்டார்.
1971-ம் ஆண்டு இனி இசைத்துறை உச்சம் தொடப் போகிறது என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 1971-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் வெளியான GUDDI என்ற இந்திப் படத்தில், வசந்த் தேசாயின் இசையில் ‘போலே ரே பப்பி ஹரா’ என்ற மியான் மல்ஹார் ராகப் பாடலை பாடி வாணி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். அறிமுகப்பாடலே பெரும் வரவேற்பை பெற்றது. வாணியின் குரலும், கதாநாயகியான ஜெயா பாதூரியின் நடிப்பும் திரையில் ஒரு மாயம் செய்தது. ரசிகர்கள் கொண்டாடினர். அதன்பின் பல்வேறு மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்தன.
தமிழ் குரலை இந்தி வரவேற்க்கும் போது, தமிழ் அதை அள்ளிவிடாதா? 1973-ம் ஆண்டு தாயும் சேயும் என்ற படத்தின் மூலம் வாணி தமிழில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். பக்திப் பாடல்கள், காதல், கொண்டாட்டம், தாய்மை, பெண்மை, சோகம் என அனைத்து உணர்வுகளிலும் அவரின் காந்த குரலால் பாடல்களை பாடி கவர்ந்தார்.
1975-இல் அபூர்வ ராகங்கள் படத்தில் பாடிய ஏழு ஸ்வரங்களுக்குள் பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகியாக தேசிய விருது பெற்றார். 1980 சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது சங்கராபரணம் படத்தில் பாடியதற்காக வழங்கப்பட்டது. 1991 மற்றொரு தேசிய விருது வழங்கப்பட்டது.
புனித அந்தோனியார் படத்தில் மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார், பி. சுசீலாவுடன் இணைந்து பாத பூஜைபடத்தில் கண்ணாடி அம்மா உன் இதயம், அந்தமான் காதலியில் நினைவாலே சிலை செய்து, சினிமாப் பைத்தியம் படத்தில் என் உள்ளம் அழகான வெள்ளித்திரை, தங்கப்பதக்கத்தில் தத்திச் செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு, பாலாபிஷேகத்தில் ஆலமரத்துக் கிளி என ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.
வாணி போட்ட விதை
வாணி குரலினிமைக்கு மட்டுமல்ல, கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளையும் அறிந்து பாடல் பாடினார். திரையில் வரும் பாத்திரத்தின் இயல்புகளோடு வாணியின் குரலைப் பொருத்திப் பார்க்க முடிந்தது. மிகவும் இயல்பாக இருந்தது. அந்த வகையில் முள்ளும் மலரும் படத்தில் வரும் நித்தம் நித்தம் நெல்லிச் சோறு, பாடலில் படாபட் ஜெயலட்சுமியின் நடிப்பை நினைவில் வைத்தே வாணி பாடியிருப்பதாக தோற்றும்.
வாணியின் இந்த திறமையை கண்ட இளையராஜா அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தில் 5 பாடல்களை வாணி வழங்கி பாராட்டியிருப்பார். அந்த பாடல்கள் அனைத்தும் ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தில் வெவ்வேறு காலகட்டத்தை பிரதிப்பலிப்பதாக இருக்கும்.
இந்த படம் மட்டுமல்லாது ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் என்னுள்ளே ஏதோ, சிறை படத்தில் நான் பாடிக்கொண்டே இருப்பேன் ஆகியவையும் ரசிகர்களால் மிகவும் ஈர்க்கப்பட்ட பாடல்கள் ஆகும். வாணியின் குரல் வசீகரிக்கும், நம் மனநிலைகளை பிரதிபலிக்கும் குரலாக பொருந்தி இருந்தது. அவர் மறைந்தாலும் அவரின் பாடல்கள் காலம் கடந்து என்னென்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil