உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், காசி தமிழ்ச் சங்கமம் கடந்த வருடம் நடைபெற்றது. இதற்காக தமிழகத்தில் இருந்து 2,500 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.
தற்போது மீண்டும் வாரணாசியில் டிசம்பர் 15 முதல் 31 வரை ‘காசி தமிழ்ச் சங்கமம்-2’ நடைபெற உள்ளது. கடந்த முறையை போல், இதையும் உ.பி. அரசுடன் இணைந்து மத்திய கல்வி அமைச்சகம் நடத்துகிறது.
இதன் ஒரு பகுதியாக 1,400 பேரை காசி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஐஐடி நிர்வாகம் கூறியிருப்பதாவது;
’பண்டைய இந்தியாவில் கற்றல், கலாச்சார மையங்களாக திகழந்த காசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான வாழ்க்கை பிணைப்பை புதுப்பிக்கும் வகையில், ’ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற திட்டத்தின்கீழ் காசி தமிழ்ச் சங்கமம் என்ற நிகழ்வு நடத்தப்பட்டது.
தற்போது 2வது கட்டமாக காசி தமிழ்ச் சங்கமம் டிச.17 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இந்த காசி தமிழ் சங்கமத்தில் தமிழகம், புதுச்சேரியில் இருந்து சுமார் 1,400 பேர் வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தி ஆகிய இடங்களுக்கு ரயிலில் சென்று வர 8 நாட்கள் பயணம் திட்டமிடப்பட்டு இருக்கிறது.
மாணவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், மதம் சார்ந்தவர்கள், தொழில் வல்லுநர்கள் என 200 பேர் கொண்ட குழுவினரை 7 குழுக்களாக பிரித்து அனுப்ப உள்ளோம்.
இதற்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளத்தை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் www.kashitamil.iitm.ac.in என்ற இணையதளத்துக்குச் சென்று பதிவு செய்யலாம். விண்ணப்பிக்க டிச.8-ம் தேதி கடைசி நாள் ஆகும்.
காசியில் உள்ள நமோகாட்டில் தமிழகம், காசியின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.
மேலும் கலை, கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், உணவு வகைகள், தமிழகம் மற்றும் காசியின் சிறப்பு தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட இருக்கின்றன.
இதுதவிர இலக்கியம், பண்டைய நூல்கள், தத்துவம், ஆன்மிகம், இசை, நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதம், கைத்தறி, கைவினைபொருட்கள், நவீன கண்டுபிடிப்புகள், வர்த்தக பரிமாற்றங்கள், அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பம் போன்ற அறிவுசார்ந்த பல்வேறு அம்சங்களில் கருத்தரங்குகள், விவாதங்கள் நடத்தப்பட உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“