Vatha kulambu recipe in tamil, Srirangam sundakkai vatha kulambu making video: வத்தக் குழம்பு இல்லாத சைவ விருந்து இல்லை. வத்தக் குழம்பு வைத்து ஒரு வாய் சாப்பிடாமல் பலருக்கு சாப்பிட்ட திருப்தியே இருக்காது. வத்தக் குழம்பை நம் பாரம்பரிய ருசியுடன் எப்படிச் செய்வது?
பெரிய சிரமமான விஷயம் இல்லை இது. ஸ்ரீரங்கம் வத்தக் குழம்பு அப்படி பாரம்பரிய ருசியுடன் பெயர் பெற்றது. அதை எப்படி உங்கள் வீட்டிலும் செய்வது என்பதை இங்கே காணலாம்.
Vatha kulambu making tamil video: ஸ்ரீரங்கம் வத்தக் குழம்பு
ஸ்ரீரங்கம் வத்தக் குழம்புக்கு தேவையான பொருட்கள் : சுண்டக்காய் – 1 கப், வெந்தயம் – 2 டீஸ்பூன், உளுந்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், மல்லி – 2 டேபிள் ஸ்பூன், மிளகு – 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், வரமிளகாய் – 4, புளி – எலுமிச்சை அளவு, சின்ன வெங்காயம் – 50 கிராம், வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன், அரிசி – 1 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – தேவையான அளவு
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்:
கடுகு – 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன், கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
ஸ்ரீரங்கம் வத்தக் குழம்பு செய்முறை
ஸ்ரீரங்கம் வத்தக் குழம்பு செய்முறை வருமாறு: முதலில் புளியை கரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயத்தை போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.
அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், மிளகு, அரிசி, மல்லி, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் சுண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்து கிளறி விட வேண்டும். பின்னர் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விடவும். குழம்பு திக்கான பதம் வந்தவுடன் அதன் மேல் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால், ஸ்ரீரங்கம் வத்த குழம்பு தயார்.
வத்தக் குழம்பை ஓரிரு நாட்கள் வைத்து பயன்படுத்தலாம். எனினும் கூடுமானவரை ஃப்ரெஷ்ஷாக செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.