காரமாகவும் மணமாகவும் உள்ள ஆனியன் பக்கோடா எப்படி செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம். இந்த ரெசிபியை செஃப் வெங்கடேஷ் பட் தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். அவரது ஸ்டைலில் குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு பிடித்த டேஸ்டியான ஆனியன் பக்கோடா எப்படி தயார் செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 250 கிராம்
பூண்டு - 50 கிராம்
பச்சை மிளகாய் - 4
சோம்பு - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/2 டேபிள் ஸ்பூன்
வனஸ்பதி (டால்டா) - 1 1/2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 150 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
கருவேப்பிலை - ஒரு கை அளவு
கடலை எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பூண்டு மற்றும் பச்சை மிளகாயை தனித்தனியாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயத்தில் பூண்டு மற்றும் பச்சை மிளகாயை சேர்க்க வேண்டும். இதனுடன் மிளகாய் தூள், உப்பு, கறிவேப்பிலை, அரிசி மாவு, கடலை மாவு, பெருங்காயம், சோம்பு, வனஸ்பதி ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பக்கோடா பக்குவத்திற்கு மிக்ஸ் செய்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை 5 நிமிடம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும், பக்கோடா மாவை உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே எண்ணெயில் கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் எடுத்து பக்கோடா மேல் தூவவும்.
அவ்வளவுதான் சுவையான ஆனியன் பக்கோடா ரெடி.!