18-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு (2025) மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த தொடருக்கான வீரர்களின் 2 நாள் ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மற்றும் நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த இரண்டு நாட்களில், மொத்தம் 182 வீரர்கள் விற்கப்பட்டனர்.
இதில் 62 வீரர்கள் வெளிநாட்டவர்கள். அவர்களை 10 அணிகளும் மொத்தமாக ரூ. 639.15 கோடி செலவழித்து வாங்கின. இதில் 20 வீரர்கள் ரூ.10 கோடிக்கு மேல் விலை போனது வியப்பூட்டியது. ரிஷப் பண்ட் (ரூ.27 கோடி, லக்னோ), ஸ்ரேயாஸ் அய்யர் (ரூ.26.75 கோடி, பஞ்சாப்) ஆகியோர் புதிய உச்சத்தை தொட்டனர்.
ஐ.பி.எல். வரலாற்றில் மிக குறைந்த வயதில் ஏலப்பட்டியலில் இடம்பெற்றிருந்த வைபவ் சூர்யவன்ஷியை (வயது 13) ரூ. 1.1 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்நிலையில், இந்த ஐ.பி.எல் மெகா ஏலத்தில் வெங்கடேஷ் ஐயரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 23.75 கோடிக்கு ஏலம் எடுத்து தக்கவைத்துக் கொண்டது. இதன் மூலம் ஐ.பி.எல்.லில் 4-வது விலை உயர்ந்த வீரர் ஆனார். நடப்பு சாம்பியனாக வலம் வரும் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு வெங்கடேஷ் ஐயர் பெரிதும் உதவினார். அதனால், ஆல்ரவுண்டர் வீரரான அவரை கடும் போட்டிக்கு மத்தியில் பெரும் தொகை கொடுத்து வங்கியிருக்கிறது கொல்கத்தார்.
வெங்கடேஷ் ஐயரின் மனைவி தெரியுமா?
இந்த ஆண்டு கொல்கத்தா அணி ஐ.பி.எல் 2024 பட்டத்தை வென்ற பிறகு, வெங்கடேஷ் தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி ரகுநாதனை மணந்தார்.
வணிகவியல் பட்டதாரியான ஸ்ருதி ரகுநாதன், கோவையில் இருக்கும் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனது பட்டப் படிப்பை (கணக்கு மற்றும் நிதியுதவி) முடித்துள்ளார். பிறகு, அவர் சென்னையில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார். அவர் தற்போது பெங்களூருவில் உள்ள லைஃப்ஸ்டைல் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வணிகப் பொருட்களைத் திட்டமிடுபவராகப் பணியாற்றி வருகிறார்.
வெங்கடேஷ் ஐயரும், ஸ்ருதி ரகுநாதனும் 2023 இல் நிச்சயதார்த்தம் செய்வதற்கு முன்பு சில வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் ஆர்.சி.பி-க்கு எதிராக அரைசதம் அடித்த பிறகு, வெங்கடேஷ் ஐயர் ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்களை நோக்கி பிளையிங் கிஸ் கொடுத்தார். பின்னர் அது மைதானத்தில் இருந்த தனது மனைவி ஸ்ருதி ரகுநாதனுக்காக என்று தெரிவித்தார்.
ஸ்ருதி ரகுநாதனுடன் வெங்கடேஷ் ஐயரின் திருமணம் அவருக்கு அதிர்ஷ்டத்தை அடித்து கொடுத்திருக்கும் நிலையில், கொல்கத்தா அணியின் அடுத்த கேப்டனாகவும் வெங்கடேஷ் ஐயர் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.