ராஜஸ்தானின் சித்தோர்கரில் உள்ள சைனிக் பள்ளியில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 53 ஆண்டுகளுக்குப் பிறகு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், தனது கணித ஆசிரியர் ரத்னா நாயரை கண்ணூர் சம்பத் கிராமத்தில் திங்கள்கிழமை சந்தித்தார்.
தன்கர், 14வது துணை ஜனாதிபதியாக பதவியேற்ற நாளில் ரத்னாவிடம், அடுத்து கேரளா வரும்போதெல்லாம் அவரது இல்லத்திற்கு வருவேன் என்று உறுதியளித்தார். இப்போது தன்கர் 2 நாள் பயணமாக கேரளாவுக்கு சென்றார்.
அவரது வீட்டில், தன்கர் தற்போது 83 வயதான தனது அன்புக்குரிய ஆசிரியரின் பாதங்களைத் தொட்டு வணங்கினார், அவரது கைகளைப் பிடித்து மிகவும் அன்புடன் பேசினார். தங்கரின் மனைவி சுதீஷும் நாயரை சந்தித்தார். ரத்னா, வி.வி.ஐ.பி விருந்தினர்களுக்கு இளநீர், சிப்ஸ் மற்றும் தனது சமையலறையில் தயாரித்த இட்லி ஆகியவற்றைக் கொடுத்து உபசரித்தார்.

ஒரு ஆசிரியர் தனது மாணவரிடம் இருந்து பெறக்கூடிய மிகப்பெரிய குரு தட்சிணை இது. மாணவர்கள் வாழ்க்கையில் உயர் பதவிகளை அடையும் போது, அவர்களின் ஆசிரியர்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றனர். எனது மாணவருக்கு நன்றி தெரிவிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை, என்றார் ரத்னா நாயர்.
சிறப்பு விமானம் மூலம் கண்ணூர் சென்ற தன்கர், அங்கு தனது ஆசிரியரின் இல்லத்தில் சுமார் அரை மணி நேரம் செலவிட்டார்.
பின்னர் ட்வீட் செய்த அவர்: ஒரு குருவின் வழிகாட்டுதலும் கருணையும் ஒருவரின் வாழ்க்கைப் பாதையை வழிநடத்தும் திசைகாட்டி.
சித்தோர்கரில் உள்ள சைனிக் பள்ளியில் நான் படித்த நாட்களில், எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த எனது ஆசிரியை திருமதி ரத்னா நாயரை இன்று கேரளாவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்ததில் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், என்றார்.
ஆசிரியர் தவிர, அவரது சகோதரர் விஸ்வநாதன் நாயர், அவரது மகள் நிதி, மருமகன் மிருதுல் ஆகியோரும் துணை ஜனாதிபதி மற்றும் அவரது மனைவியை வரவேற்க ரத்னா வீட்டில் இருந்தனர். சட்டசபை சபாநாயகர் ஏஎன் ஷம்சீரும் தங்கருடன் உடன் சென்றார்.
முன்னதாக, துணை ஜனாதிபதியுடனான தனது முந்தைய உரையாடலை நினைவு கூர்ந்த நாயர் கூறினார்:
தங்கர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11 அன்று, தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள என்னை அழைத்திருந்தார். அவருடைய பள்ளி ஆசிரியர்களில் இருவர் மட்டுமே இப்போது உயிருடன் உள்ளனர். உடல்நிலை சரியில்லாததால் என்னால் டெல்லிக்கு செல்ல முடியவில்லை.
ஆசிரியையும்-மாணவரும் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக ஒருவரையொருவர் சந்திக்கவில்லை, இருப்பினும் ரத்னா – வழக்கறிஞர் முதல் சட்டமன்ற உறுப்பினர், மக்களவை உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சர் வரை- தனது மாணவரின் உயர்வைக் கண்காணித்தார்
2019-ல் மேற்கு வங்க ஆளுநராக தன்கர் பதவியேற்றபோதுதான் இருவரும் மீண்டும் இணைந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“