விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான பாவம் கணேசன் தொடரில் நடித்து வருகிறார் திருச்சியை சேர்ந்த பிரனிகா தக்ஷன்யா. இவருக்கு சிறு வயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்பது கனவு. 9 ஆம் வகுப்பு படிக்கும்போது நீட் தேர்வுக்காக கோச்சிங் எல்லாம் சென்றுள்ளார். மிகவும் துருதுருவென இருப்பவர். சினிமா மீது மிகுந்த ஆர்வமும் உண்டு. ஃப்ரீ டைமில் டிக்டாக்கில் வீடியோ அப்லோடு செய்துள்ளார். பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் உள்ள திருமண மலர்கள் தருவாயா பாடலை ரீ கிரியேஷன் செய்து பதிவிட்டுள்ளார். அவ்வளவுதான்! அந்த வீடியோ பல வீயூவர்ஸை தாண்டியது.
முதல் வீடியோ ரீச் ஆனதால் குஷியானவர் அடுத்தடுத்து திரைப்பட வசனங்கள், பாடல்களுக்கு நடித்து பதிவிட ஆரம்பித்தார். இவருடைய அம்மா ஃபுல் சப்போர்ட். பிறகு ‘டிக்டாக் பிரனிகா என பெயர் வாங்கி தரும் அளவுக்கு ரீச் ஆனார். இவருடைய நடிப்பை பார்த்து நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். டிக்டாக் பதிவிற்காக வே பெஸ்ட் பீ மேல் மியூசர் இன் தமிழ்நாடு என்ற விருதும் வாங்கியுள்ளார். பிரனிகாவின் டிக்டாக் பதிவு அவருக்கான வாய்பை தேடித் தந்தது. ஏராளமான ஷார்ட் பிலிம்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
ரோஷினி 12சி, 18+ கேர்ள், சர்ப்பரைஸ் ஃபீட், வச்சி செஞ்சிட்டா, கால் கிலோ காதல், வரம், மாய உலகம், சாரல் ஆல்பம் சாங் போன்ற ஏராளமான குறும்படங்கள், ஆல்பம் சாங்ஸ், வெப் சீரிஸ்களில் நடித்து ரொம்பவே பிரபலமானார். பிரனிகா நடித்த பல குறும்படங்கள் காதலை மையப்படுத்தி இருந்ததால் இளைஞர்கள் மத்தியில் நல்ல ஹிட் அடித்தது. அதிலும் 143 என்ற லவ் வெப் சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி நடித்து வந்தார். ஷார்ட் பிலிம்கள் மூலம் கிடைத்த பாப்புலாரிட்டி மூலம் விஜய் டிவியில் நுழைந்தார். ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ என்ற ரியாலிட்டி ஷோவில் பல கெட்டப்புகளில் கலக்கினார்.
தொகுப்பாளர்கள் டிடி, பிரியங்கா போல் ஆங்கரிங் செய்து அசத்துவார். பிரணிகாவின் திறமைக்கு அடுத்ததாக கிடைத்தது சின்னத்திரை வாய்ப்பு. விஜய் டிவியில் டாப் ரேட்டிங்கில் ஓளிபரப்பாகி வரும் தொடர் பாவம் கணேசன். இந்த தொடரின் நாயகி நேஹா கவுடாவின் தங்கையாக ஸ்ரீமதி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் பிரனிகா. நடிப்பு பிடித்து போனதால் தனது கவனத்தை சினிமா மீது திருப்பியுள்ளார். ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன் படிப்புக்கு விண்ணப்பித்துவிட்டுக் காத்திருக்கிறார். சின்னத்திரை மட்டும் அல்ல. சினிமாவிலும் கால் பதித்துள்ளார்.
நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள எங்கள் பாட்டன் சொத்து படத்தில் இரண்டாவது கதாநாயகியாகவும், நடிகர் விஷ்ணு பிரியன் நாயகனாக நடிக்கும் வடசேரி படத்திலும் நடித்துள்ளார். பிரனிகாவிற்கு ரொமான்டிக்காக நடிப்பது ரொம்ப பிடித்தமான ஒன்று. அவர் நடித்த ஏராளமான வெப் சீரிஸ்களில் காதல் காட்சிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியிருப்பார். சமூக வலைதளங்களில் எப்போதும் போல் ஆக்டிவாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ஃபாலோவர்ஸ். அவ்வபோது ஃபோட்டோஷூட் செய்து புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். பிரனிகாவின் நடிப்பு எதார்த்தமாக இருப்பதால் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது. ஷார்ட்பிலிம், சீரியல், சினிமா என பிசியாக வலம் வருகிறார் இளம் நடிகை பிரனிகா.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil