குக்வித் கோமாளி நிகழ்ச்சியில், பிரியங்கா விஜய் சேதுபதிக்கு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்து கொடுத்தார். அதன் ரெசிபியை நீங்களும் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 9 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கடலை பருப்பு – 2 டீஸ்பூன்
வேர்க்கடலை – 3 டீஸ்பூன் (தோல் நீக்கியது)
வெள்ளை எள் – 3 டீஸ்பூன்
தனியா – 5 டீஸ்பூன்
கத்திரிக்காய் – ½ கிலோ
தேங்காய் துருவல் – ½ மூடி
காய்ந்த மிளகாய் – 5-6
சின்ன வெங்காயம் – 150 கிராம்
தக்காளி - 5
பூண்டு – 15-20 பல்
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
தனியா தூள் – 1 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ½ டீஸ்பூன்
பெருங்காயம் – 1 டீஸ்பூன்
புளி – 75 கிராம்
வெல்லம் – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை: முதலில், அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடாக்கவும், அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து காய விடவும்.பின்பு எண்ணெய் வெந்தயம் சேர்த்து வறுபட்டவுடன், கடலைப்பருப்பு, வெள்ளை எள், வேர்க்கடலை மற்றும் தனியா சேர்த்து வறுக்கவும்.நன்கு பொரிந்தவுடன் இதில் 4 டீஸ்பூன் தேங்காய் துருவலை சேர்த்து கலந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். ஆறிய பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து, ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காய விடவும்.இதில் பகுதியாக நறுக்கிய கத்திரிக்காயைப் போட்டு, ஒரு 15 நிமிடம் மிதமான சூட்டில் வதக்கவும்.பின்னர் கத்தரிக்காயை எண்ணெயிலிருந்து வெளியே எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
அதே எண்ணெய்யில் காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும்.இதில் கடுகு சேர்த்து பொரிந்தவுடன், பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு பொன்னிறமாக மாறியவுடன் அதில் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். கூடவே கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கவும்.நன்கு வதங்கிய பின், அதில் அரைத்து வைத்த தக்காளியை ஊற்றவும். இதில் மஞ்சள் தூள், தனியா தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சமைக்கவும். பின்னர், அரைத்து வைத்த மசாலாவை இதன் கூட சேர்த்து கொதிக்க வைக்கவும். இதில் கரைத்து வைத்த புளித் தண்ணீரைச் சேர்த்து, கூடுதலாக ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து 7 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.அதன் பின் வதக்கி வைத்த கத்திரிக்காயை இதில் சேர்க்கவும். மேலும் இதில் பெருங்காயம் சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்த பின் தேவைப்பட்டால் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து இறக்கி விடவும். அருமையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ரெடி.