Bharathi Kannamma Roshini Haripriyan: இன்றைய தினத்துக்கு தமிழ்நாட்டில் கண்ணம்மா என்ற பெயர் ஒருவரைத்தான் நினைவுப்படுத்தும். ஆம்! விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில், நடித்து வரும் ரோஷினி ஹரிபிரியன் தான் அவர்.
ரோஷினி ஹரிப்ரியன்
அந்த சீரியலில் கண்ணம்மாவின் மாமியாருக்கு கறுப்பு என்றாலே பிடிக்காது. ’வெள்ளையா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்’ என்பது போல, சிவப்பு நிறத்தில் அழகாக இருப்பவர்கள் தான் நல்லவர்கள் என்ற மனநிலையில் இருந்தார் கண்ணம்மாவின் மாமியார் செளந்தர்யா. ஆனால், அவள் கர்ப்பமானதும், முழுவதுமாக மாறி, வீட்டை விட்டு வெளியேறிய கண்ணம்மாவுக்காக தற்போது தவித்துக் கொண்டிருக்கிறார்.
ஸ்டைலிஷ் ரோஷினி
கையில் பையுடன் வீட்டை விட்டு வெளியேறிய கண்ணம்மா, நிலவுக்கு சென்றது போலவும், பிக் பாஸுக்கு சென்றது போலவும் பல்வேறு வகையான மீம்கள் இணையத்தில் வலம் வந்தன. சரி நிஜத்தில் கண்ணாம்மா என்பவர் யார் என்பதை ஆராய்ந்தோம்... அவரின் உண்மையானப் பெயர் ரோஷினி ஹரிப்ரியன்.
சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், செயின்ட் மேரீஸ் பெண்கள் பள்ளியில் பள்ளி படிப்பையும், எத்திராஜ் கல்லூரியில் இளங்கலை பட்டமும் பெற்றவர். கல்லூரி முடித்ததும், ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த ரோஷினி, அங்கு இரண்டு வருடம் வேலை செய்திருக்கிறார். பின்னர் வேலையை விட்டு விட்டு மாடலிங் துறைக்குள் புகுந்திருக்கிறார்.
இது குறித்து முன்பொரு நேர்க்காணலில், “நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னைதான். காலேஜ் முடிஞ்சதும் ஐடி கம்பெனியில் இரண்டு வருஷமா வேலை பார்த்துட்டு இருந்தேன். அதுக்கு அப்புறம் இது நமக்கான இடம் இல்லைன்னு தெரிஞ்சது உடனே அந்த வேலையை விட்டுட்டு மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன்” என்று தெரிவித்திருந்தார் ரோஷினி.
சின்ன வயதில் இருந்தே மாடலிங் பண்ணனும் என்கிற ஆசை இருந்தாலும், மாநிறத்தில் இருப்பதால், சிவப்பாக இருப்பவர்களால் மட்டும் தான் இதெல்லாம் செய்ய முடியும் என, நினைத்து அதற்கான முயற்சிகளை எடுக்காமல் விட்டு விட்டாராம் ரோஷினி. பின்னர் ஸ்கின் டோன் நன்றாக இருப்பதாகக் கூறி, வாய்ப்புகள் வந்ததாம்.
”முன்னாடி நான் நடிச்சதே இல்ல.. எப்படி சாத்தியம்னு கொஞ்சம் யோசிச்சேன். டைரக்டர் பிரவீன் சார் தான் எனக்குள்ள ஒரு நம்பிக்கை கொடுத்தார். என்னால முடியும்னு என்னை விட அவர் நம்பினார். அவர் சொல்லிக் கொடுக்கிறதை ஸ்கிரீன்ல வெளிப்படுத்துறேன். இன்னும் நிறைய பேர் நான் பிளாக் மேக்கப் போட்டுக்கறதா நெனச்சுக்கிறாங்க. ஆனா உண்மையிலேயே இதுதான் என்னோட கலர்” எனக் கூறியிருந்தார் ரோஷினி.
மேலும் தொடர்ந்த அவர், “நான் படிச்சது ஆங்கிலோ இந்தியன் ஸ்கூல். அங்கே என்னுடைய நிறத்தினால் நிறைய விஷயங்களை எதிர்கொண்டிருக்கிறேன். அதே மாதிரி காலேஜிலும் பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்திச்சிருக்கேன். நாம கறுப்பா இருக்கோம்ன்னு மனசளவுல நானே டவுணா ஃபீல் பண்ணியிருக்கேன். நான் கலரா இல்லைங்குறதை விட நாம அழகா இல்லைங்குற உணர்வு எனக்குள்ளே இருந்துச்சு. காலேஜ் விட்டு வெளி உலகத்துக்கு வரும்போது என்னை நானே மாத்திக்க ஆரம்பிச்சேன்.
கண்ணம்மா என்கிற ரோஷினி
ரோஷினினா இவங்க தான் என்று எனக்கு அடையாளத்தை தந்ததே என் நிறம் தான். நிறைய விஷயங்களில் என்னுடைய நிறம் எனக்கு பிளஸ் ஆக அமைந்தது. என்னுடைய நிறம் நெகட்டிவாக இருந்ததில்லை. ஒரு முறை விளம்பரங்களில் நடிக்க சொன்ன போது அங்கு இருந்தவர்கள் பாம்பே மாடல் இருந்தால் நல்ல இருக்கும், இவங்க எல்லாம் வேணாம் என்று சொன்னார்கள். இதனால் எனக்குள்ளேயே என்னுடைய நிறம் குறித்து பயங்கரமான காம்ப்ளக்ஸ் இருந்தது. என்னுடைய நிறத்தால் நான் முதலில் பயங்கர கஷ்டப்பட்டு இருக்கிறேன். நிறத்தால் மற்றவர்களுக்கு என்னை பிடிக்காமல் இருக்குமோ? என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்களோ? என்ற பயம் என்னுள் இருந்தது. ஆகவே யாரும் நீங்களே உங்களை தாழ்த்தி கொள்ளாதீர்கள். உங்களை தாழ்த்துவதற்கு உங்களை சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். அதனால் நீங்கள் உங்களைத் தாழ்த்தி கொள்ளாதீர்கள். முதலில் உங்களை நீங்கள் லவ் பண்ணுங்க. மனதார நீங்கள் தான் அழகு என்று நம்புங்கள்” என்றும் குறிப்பிட்டார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”