விஜய் டிவியையும், ரியாலிட்டி ஷோக்களையும் பிரிக்க முடியாது. குறிப்பாக விஜய் டிவியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் ஒரு சில நிமிடங்களில் தோன்றி விட்டாலே அவர்கள் மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆகி விடுகின்றனர்.
விஜய் டிவியின் பலமே அந்த சேனலில் பணியாற்றும் காமெடியன்கள் தான். மற்ற டிவி சேனல்களுடன் ஒப்பிடுகையில் விஜய் டிவியில் வரும் காமெடியன்கள் மிகவும் திறமையானவர்களாக இருக்கின்றனர். இன்னும் சொல்ல போனால், மற்ற சேனல்களும், அவர்களை வைத்துதான் பல ஷோக்களை நடத்துகின்றனர்.
அதற்கேற்ற மாதிரி விஜய் டிவியும், காமெடியன்களை ஒரே நிகழ்ச்சியுடன் ஓரம் கட்டாமல், சீரியல், ரியாலிட்டி ஷோ என தாங்கள் ஒளிபரப்பும் எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர்களுக்கான வாய்ப்பை வழங்கி வருகிறது.
அப்படி சில காமெடியன்கள் தங்கள் அதீத திறமை மூலம், வெள்ளித்திரையிலும் கால்பதித்து பிரகாசித்து வருகின்றனர்.
அந்தவகையில் அறந்தாங்கி நிஷா கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்தார். அதில் இவரது நகைச்சுவை பேச்சுகள் மக்களை மிகவும் கவர்ந்தது. அதன் அடுத்தக்கட்டமாக தற்போது வெள்ளித்திரையிலும் நிஷா நடித்து வருகிறார்.
அவரைப் போலத்தான் சரத். நிஷா போட்டியளாராக பங்கேற்ற அதே சீசனில் தான் சரத்தும் கலந்து கொண்டார். அதில் சரத்தும், தீனாவும் சேர்ந்து செய்த காமெடி அட்டகாசங்கள் பலரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்தது. குறிப்பாக சரத் மொட்டை ராஜேந்திரன் போலவே, மொட்டை மண்டையுடன், தொண்டைக் கட்டிய குரலில் பேசுவது அவரின் தனிச்சிறப்பு.
அதன்பிறகு, தீனா பட வாய்ப்புகள் கிடைத்து வெள்ளித்திரைக்கு சென்றுவிட்டார். இருந்தாலும் அவ்வப்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தோன்றுவார்.
அவருடன் இருந்த சரத், விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். சமீபத்தில் நடந்த மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை சீசன் 3-இல் சரத் மற்றும் அவரது மனைவி கிருத்திகா கலந்து கொண்டனர். அதில், இந்த ஜோடி அனைத்து டாஸ்க்குகளிலும் அசத்தி, பட்டத்தை வென்றது.
இந்நிலையில் நிஷா, சரத் வீட்டுக்கு மதியம் சாப்பாட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் செய்த அமர்க்களங்களை கிருத்திகா வீடியோவாக எடுத்து, சரத் உடைய யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.
ஓருமுறை நிஷா, கிருத்திகாவை தனது வீட்டுக்கு அழைத்து, அவரை நன்றாக கலாய்த்து அனுப்பியுள்ளார். இப்போது அதற்கு ரிவென்ஞ் எடுக்கும் வகையில், கிருத்திகாவும், நிஷாவை தனது வீட்டுக்கு சாப்பிட அழைத்து, பங்கமாக கலாய்த்து வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீடியோவில், ரசம், மாங்காய் பச்சடி, உருளைக்கிழங்கு கூட்டு, மண்சட்டி குழம்பு என சகல விருந்துகளுடன் கிருத்திகா உபசரிக்க, நிஷா முருங்கைக்காயை, ஏதோ நல்லி எலும்பு ரேஞ்சுக்கு உறிஞ்சு சாப்பிடுகிறார்.
அப்போது நிஷா நான் முதல் தடவை வந்தபோது, சரத் கடையில் இருந்து குழம்பு வாங்கி வந்தான். அதனால் உனக்கு சமைக்க தெரியாது என நினைத்தேன் என்று சொல்ல, அதற்கு கிருத்திகா, சமைச்சுக் கொடுத்தா அப்புறம் இங்கேயே வந்துருவாங்க; அதனாலதான் குழம்பு மட்டும் வெளியே வாங்கிட்டு வர சொன்னேன் என்று கூறுகிறார்.
இப்படி நிஷாவும், கிருத்திகாவும் சாப்பிட்டு முடிக்கும் வரை, ஒருவரையொருவர் மாற்றி மாற்றி கலாய்க்கும் வீடியோ இப்போது யூடியூபில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“