/indian-express-tamil/media/media_files/9lf181dar5BzbNdjSZpl.jpg)
KPY Bala
விஜய் டிவியையும், ரியாலிட்டி ஷோக்களையும் பிரிக்க முடியாது. விஜய் டிவியின் பலமே அந்த சேனலில் பணியாற்றும் காமெடியன்கள் தான். அதற்கேற்ற மாதிரி விஜய் டிவியும், காமெடியன்களை ஒரே நிகழ்ச்சியுடன் ஓரம் கட்டாமல், சீரியல், ரியாலிட்டி ஷோ என தாங்கள் ஒளிபரப்பும் எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர்களுக்கான வாய்ப்பை வழங்கி வருகிறது.
சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் விஜய் டிவி காமெடியன்கள் ஜொலித்து வருகின்றனர். அந்தவகையில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக அறிமுகமான KPY பாலா இன்று சினிமா, ரியாலிட்டி ஷோ, ஆங்கரிங் என பிஸியாக இருக்கிறார்.
அத்துடன் நில்லாமல் டிவி, ரியாலிட்டி ஷோக்களில் தனக்கு கிடைக்கும் வருமானம் மூலம் பல ஏழை எளியக் குழந்தைகள் கல்வி கற்கவும், பசியாற்றவும் பிற அத்தியாவசிய உதவிகளையும் செய்து வருகிறார் பாலா.
சில மாதங்களுக்கு முன், பாலா தன்னுடைய பிறந்தநாளுக்கு முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார்.
பின்னர் ஈரோடு மாவட்டம் கடம்பூர், குன்றி மலைவாழ் மக்களின் மருத்துவ தேவைகளுக்காக பாலா, தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார்.
அப்போது, இதேபோல், மருத்துவ வசதி இல்லாத மலை கிராமங்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தித் தரும் பணியை தொடரவுள்ளதாக பாலா கூறியிருந்தார்.
தொடர்ந்து ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் சோளகனை மலைக்கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.5 லட்சம் மதிப்பில், இலவச ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்தார்.
தற்போது சேலம், திருப்பூர், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரத்தில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாலா நான்காவது ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்துள்ளார்.
அந்த வீடியோ இப்போது இன்ஸ்டாவில் வெளியாகி பலரது பாராட்டை பெற்றுள்ளது.
இதுகுறித்து பாலா கூறும்போது, ’125 நாட்கள்ல நான்கு ஆம்புலன்ஸ் கொடுத்துருக்கேன். இது என் தகுதிக்கும் சக்திக்கும் மீறுன விஷயம், சில பேரு உனக்கே வண்டி இல்ல, உனக்கு எதுக்கு இது எல்லாம் கேட்கிறாங்க. நான் பென்ஸ் கார் வாங்கி ரோட்ல போறதுக்கு பதிலா, ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து ரோட்டோரம் இருக்கறவங்களுக்கு அது பயன்பட்டுதுன்னா அது நான் பென்ஸ் கார்ல போனதுக்குச் சமம்.
இது போல இன்னும் பல ஆம்புலன்ஸ்களை கொடுப்பேன்.
நான் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் தான் உதவிசெய்து வருகிறேன். யார்கிட்டயும் ஒரு ரூபாய் கூட வாங்கல, என் பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன்’ என்றார் பாலா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.