Vijay Tv Ramya Viral Video Fitness Secrets Tamil News : ‘எப்படி இருந்தவங்க இப்போ இப்படி மாறிட்டாங்க’ என்று பலரும் ஆச்சரியப்படும் அளவிற்கு மாறிப்போய் இருக்கிறார் விஜய் டிவி புகழ் விஜே ரம்யா. ஃபிட்னெஸில் அதிக ஆர்வம் காட்டும் ரம்யா, சமீபத்தில் தன்னுடைய யூடியூப் சேனலில் வயிறு வீக்கமடைவதிலிருந்து எப்படிப் பாதுகாப்பது என்கிற தகவலைப் பகிர்ந்துகொண்டார். சில எளிமையான வழிமுறைகளைப் பின்பற்றுவது மூலமாக இதனைச் செய்ய முடியும் என்று கூறியபடி காணொளிக்குள் நம்மைக் கூட்டிச் சென்றார்.

குடலை நாம் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறோமோ அந்த அளவிற்கு உங்களுடைய வயிறு ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு மூன்று விஷயங்களை கடைபிடிப்பது முக்கியம். மாடுகளில் செரிமானம். நாம் சாப்பிடும் உணவு வாயிலிருந்து வயிறு வரை சென்று நன்கு செரிமானம் ஆகவேண்டும். அடுத்ததாக, உறிஞ்சுதல். அதாவது நாம் உண்ணும் உணவில் உள்ள வைட்டமின், மினரல்ஸ் உள்ளிட்ட அனைத்து சத்துகளும் சரியாகப் பிரிந்து உடலில் சேரவேண்டும். இறுதியாக வெளியேறுதல். அதாவது தேவையில்லாத டாக்சிக் பொருள்கள் நம் உடலை விட்டு சிறுநீர் மற்றும் மலம் மூலமாக சரியாக வெளியேற வேண்டும். இந்த மூன்று செயல்முறைகளும் சரியாக நடந்தால், நிச்சயம் உங்களுடைய குடல் ஆரோக்கியமானதாக இருக்கும்.

அப்படி குடல் ஆரோக்கியமாக இல்லையென்றால் வயிறு வீக்கம், மலச்சிக்கல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் உடலில் ஏற்படும். அவற்றைத் தவிர்க்க இந்த ஐந்து எளிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
மனதார சாப்பிடுங்கள்
நாம் எப்படி மற்றும் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். பரபரவென்று சாப்பிடும்போது என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதெல்லாம் தெரியாது. மேலும், உணவை நன்கு மென்று சாப்பிட மாட்டோம். இப்படியெல்லாம் சாப்பிடவே கூடாது. ஒவ்வொரு தடவை உணவை உட்கொள்ளும்போதும் பொறுமையாக மென்று, உணவை முழுவதுமாக உடைத்து சாப்பிடவேண்டும். அப்படியே முழுங்கினால், அது செரிமானத்திற்குத் தடங்கலாக இருக்கும்.

குடலை சுத்தம் செய்யும் வழக்கம்
குறைந்தது 8 மணிநேர இடைவெளிக்குப் பிறகு நாம் காலையில் முதலில் உட்கொள்ளப்போகும் உணவு மிகவும் முக்கியமானது. அந்த வரிசையில் பழங்கள், காய்கறிகள் என இயற்கைப் பொருள்களை உட்கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் மேலாக வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது.
ப்ரோபயாடிக் உணவுகள்
நம் உடம்பில் நல்ல பாக்டிரியாக்கள் அதிகரிக்கும் போதுதான், உடலில் தேவையில்லாத உணவுப் பொருள்களை வெளியேற்ற உதவுகிறது. ஆனால், கெட்ட பாக்டிரியாக்கள் அதிகமானால் இந்த நிலை அப்படியே மாறிவிடும். அந்த வரிசையில் தயிர், பனீர், முட்டைகோஸ், எலுமிச்சை, இட்லி ஆகிய உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.
உடற்பயிற்சி
காலை எழுந்து தண்ணீர் குடித்து முடித்ததும், நின்றுகொண்டு, படுத்துக்கொண்டு என வெவ்வேறு நிலையில் மூக்கு வழியாகக் காற்றை சுவாசித்து வாய் வழியாக வெளியேறுங்கள். முழுமையாகக் காற்றை இழுக்கவேண்டும் அதேபோல முழுமையாக வெளியேற்ற வேண்டும். இப்படிச் செய்தால் நிச்சயம் உங்களுடைய குடல் ஆரோக்கியமாக இருக்கும்.
குடலுக்கான உடற்பயிற்சி
உங்கள் வயிறு வீக்கத்தைத் தவிர்ப்பதற்கு ஏராளமான உடற்பயிற்சிகள் உள்ளன. சுடுதண்ணீர் பையை வயிற்றுப் பகுதியில் சிறிது நேரம் வைத்துக்கொள்வது, பெப்பர்மின்ட் எண்ணெய்யை வயிற்றில் தேய்த்துக்கொள்வது, சில ஆசனங்களைப் பின்பற்றுவது என பல்வேறு வழிமுறைகள் உள்ளன. உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை முயற்சி செய்து, உங்கள் குடலையும் வயிற்றையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்.”
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil