பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் சித்தியாக நடித்து மிகவும் பாப்புலரானவர் பாக்கியலட்சுமி. இவரது நிஜப்பெயர் செந்தில்குமாரி. மதுரையை சேர்ந்தவர். திருமணத்திற்கு பிறகு கணவரின் வேலைக்காக சென்னையில் செட்டில் ஆகியுள்ளார். இவர் திரைத்துறையில் முதன் முதலில் அறிமுகமானது இயக்குநர் ராம் இயக்கத்தில் 2007ல் வெளியான கற்றது தமிழ் படம்தான். அப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே 2006ல் விஜய்டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் டீச்சராக நடித்திருந்தார். அவரது கேரக்டர் அதில் அவ்வளவாக ரீச் ஆகவில்லை. பிறகு 2009ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படத்தில் அம்மா கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார். இந்தபடத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விஜய்டிவி விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார். அடுத்ததாக தோரணை படத்தில் நடித்தார். தெலுங்கில் பிஸ்தா படத்திலும் நடித்து வந்தார். பிறகு தொடர்ச்சியாக சினிமா வாய்ப்புகள் வந்தது.

தமிழில் திட்டக்குடி, நீயும் நானும், சகாக்கள், ஒஸ்தி, கொள்ளைக்காரன், மெரினா, கடல், இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா, கோலிசோடா, ஞானக் கிருக்கன், அகத்தினை, விந்தை, விருமாண்டிக்கும் சிவணான்டிக்கும் போன்ற பல படங்களில் துணை நடிகையாக, அம்மாவாக நடித்து வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் . படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போதுதான் அவருக்கு மீண்டும் சின்னத்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. விஜய்டிவியின் சரவணன் மீனாட்சி சீசன்3 யில் தெய்வானை கேரக்டரில் நடித்தார். அன்பான அம்மாவாக சிறந்த மாமியாராக தனது நடிப்பை வெளிப்படுத்தினார். இந்த தொடரில் நடித்ததற்காக விஜய்டிவியின் சிறந்த மாமியாருக்கான விருதை வென்றார். மேலும் இவர் ஆடுகளம் படத்தில் பேட்டைகாரன் மனைவியாக நடித்த மீனாலின் அக்காவும் கூட.

தீவிர விஜய் ரசிகையான இவருக்கு விஜய் படத்திலேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2017ல் வெளியான மெர்சல் படத்தில் செல்வி கேரக்டரில் நடித்தார். பிறகு கடைக்குட்டி சிங்கம், சார்லி சாப்லின்2, அய்ரா படத்தில் பவானி அம்மாவாக, நெடுநல்வாடை, களவாணி2, இரண்டாம் குத்து, சுல்தான், மண்டேலா போன்ற படங்களில் நடித்திருந்தார். இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார் செந்திகுமாரி. நடிப்பை தாண்டி இவர் டப்பிங் ஆர்டிஸ்டும் கூட. அவன் இவன் படத்தில் விஷாலுக்கும் இவர்தான் குரல் கொடுத்துள்ளார். 2019ல் ஒளிபரப்பை தொடங்கி தற்போது டாப் டிஆர்பியில் இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் சித்தியாக நடித்து வருகிறார். நெகட்டிவ் ரோல்தான் என்றாலும் ரசிகர்களிடையே அதிகம் ரீச் ஆனார். சன்டிவியிலும் வானத்தை போல தொடரில் செல்லத்தாயி ரோலில் நடித்து வருகிறார்.

சீரியல், படங்கள் என ஒருபக்கம் நடித்து கொண்டிருந்தாலும் போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். சின்னத்திரை, வெள்ளித்திரை என பிசியாக நடித்து வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”