scorecardresearch

கிளாமர் வேண்டாம்… ஹீரோயின் சான்ஸும் தேவையில்லை: பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் சக்ஸஸ் ஃபார்முலா!

Vijay Tv Serial Actress: தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற தொடர் தான் சுஜிதாவுக்கு முதல் சீரியல்.

actress sujitha, pandiyan stores

தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் தனம் என்ற கேரக்டரில் நடித்து வரும் சுஜிதா இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வருகிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். 1980 களில் குழந்தை நட்சத்திரமாகக் கலக்கியவர். சுஜிதா பிறந்து 45 நாட்களே ஆன நிலையில் அப்பாஸ் என்ற படத்தில் கே ஆர் விஜயாவின் பேத்தியாக சினிமாவில் நடிக்க தொடங்கினார். பிறகு பாக்கியராஜ் மற்றும் ஊர்வசி நடித்த முந்தாணை முடிச்சு படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழை தவிர சுஜிதா, குழந்தை நட்சத்திரமாக சில தெலுங்கு ,மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர். ரஜினி, கமல், சத்யராஜ், கார்த்திக், சிரஞ்சீவி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். பூவிழி வாசலிலே படத்தில் ‘சின்னச் சின்ன ரோஜா பூவே’ என சத்யராஜ் பாடிய பாடலை மறக்க முடியுமா? ஐந்து மொழிகளில் வெளியான அப்படத்தில் அனைத்திலும் இவரே நடித்துள்ளார். 1987 மற்றும் 1988-ல் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான நந்தி அவார்டையும் பெற்றிருக்கிறார்.

மலையாளத்தில் வஷி, பிரியில்லா நாம், தமிழில் தேவர் மகன், பாம்பே, வாலி, ஆயிரத்தில் ஒருவன்,பள்ளிக்கூடம், தாண்டவம் என பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். லேட்டஸ்டாக சாய்பல்லவியின் தியா படத்தில் மருத்துவராக நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சுஜிதா சினிமாவில் ஹீரோயினாக நடித்ததில்லை. வாய்ப்புகள் வந்தும் சின்னத்திரைக்குள் நுழைந்ததால் சினிமாவில் நடிக்கவில்லை எனகூறும் சுஜிதா, கிளாமராக நடிக்க தனக்கு விருப்பமும் இல்லை என்கிறார்.

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற தொடர் தான் சுஜிதாவுக்கு முதல் சீரியல். தொடர்ந்து உறவுகள், சுவயம்வரம், அக்கா தங்கை, திருவிளையாடல், பிருந்தாவனம், சவுந்தர்யா, கல்பனா, சுந்தர கண்டா, மருதாணி, இந்திரா, விளக்கு வச்ச நேரத்துல, மைதிலி, சங்கமம் என பல தொடர்களில் நடித்தார். சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘என் கணவருக்காக’ தொடரை 90ஸ் கிட்ஸ் மறந்து இருக்கமாட்டீர்கள். அதில் சந்தியாவாக நடித்திருப்பார். அப்போது ப்ளஸ் டூ படித்து வந்துள்ளார். காலெஜ் படித்துக்கொண்டிருக்கும்போதே நான்கு மொழி சீரியல்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

சுஜிதாவின் கணவர் தனுஷ். விளம்பர பட இயக்குநர். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்டார். பைரவி சீரியலுக்கு பிறகு சின்ன இடைவெளி எடுத்துக்கொண்டார். ஜீ தமிழ் ‘ஒரு கை ஓசை’ சீரியலில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு சீரியல்களில் நடித்து ஃபேமஸ் ஆனவர். ஹரிச்சந்தனம் என்ற சீரியலில் “உன்னிமயா” என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம், கேரளாவில் மிகவும் பிரபலமானார் சுஜிதா. இந்த தொடரில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதும் பெற்றார். மூன்று மொழிகளில் 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

டிவி சேனல்களின் ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராகவும், நடுவராகவும் இருந்துள்ளார்.. Mrs.சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று தனது திறமைகளை வெளிப்படுத்தினார். அமிர்தா டிவியின் சூப்பர் டான்ஸர், கலர்ஸ் தமிழின் எங்க வீட்டு மாப்பிள்ளை போன்ற பல நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ளார். சின்னத்திரையில் கணவருக்காக தொடருக்கு பின் சுஜிதாவுக்கு மிகப் பெரிய ஹிட் கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். 500 எபிசோடுகளை தாண்டி ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இல்லத்தரசிகளின் ஆல் டைம் ஃபேவரெட். இந்த தொடரில் மூத்த மருமகளாக தனம் அண்ணியாக நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் சுஜிதா. இந்த சீரியலில் நடித்தற்காக விஜய் டிவி விருதும் வாங்கியுள்ளார்.

சுஜிதா திரையுலகிற்கு வந்து 34 ஆண்டுகள் ஆகிறது. சின்னத்திரையில் மட்டுமே 14 ஆண்டுகளுக்கு மேலாக அவரின் பயணம் தொடர்கிறது. பல மலையாள படங்களுக்கு டப்பிங் பேசி இருக்கிறார் சுஜிதா. மாஸ்டர் படத்தின் மலையாள வெர்ஷனில் மாளவிகாவுக்கு இவர்தான் டப்பிங் பேசி இருந்தார். சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவானவர். யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் தன்னை பற்றி ரசிகர்களுக்கு தெரியாத பல தகவல்களை பகிர்ந்து வருகிறார். பல முன்னணி பிராண்டுகளின் விளம்பரங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவரை அதிகம் பேர் பின் தொடர்கின்றனர். சீரியல், சினிமா எதுவாக இருந்தாலும் கதையில் தன்னுடைய கேரக்டருக்கான முக்கியத்துவத்தை பார்த்து தேர்ந்தெடுகிறார் சுஜிதா.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Vijaytv pandiyan stores dhanam sujitha biography