விஜய் டிவியில் முன்னணி சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இதில் இனியாவாக நடித்து வருபவர் நேஹா மேனன். தமிழ் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பிசியான நடிகையாக கலக்கி கொண்டிருக்கிறார். தற்போது அவருக்கு வயது 19. கேரள மாநிலம் சாலக்குடியை பூர்வீகமாக கொண்ட இவர், வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். தற்போது கல்லூரி படித்து வருகிறார். தமிழ் சின்னத்திரையில் பைரவி என்ற சீரியலின் மூலம் தான் அறிமுகமானார். அதன் பின்னர், பிள்ளை நிலா, நிறம் மாறாத பூக்கள், தமிழ்செல்வி தொடரில் நடித்தார். இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது வாணி ராணி தொடர் தான்.
கடந்த 2013ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும்பாலான இல்லத்தரசிகளின் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று நிறைவுற்ற தொடர் வாணி ராணி. இதில் ராதிகாவின் கடைசி மகளாக ரொம்பவே புத்திசாலி மகளாக நடித்திருப்பார். இவரின் துரு துரு பேச்சு, நடிப்பு ராதிகாவுக்கே மிகவும் பிடிக்குமாம். குறிப்பாக இவருக்கும் ராதிகாவுக்கு இடையேயான சீன்கள் அனைவரும் ரசிக்கும் படியாகவே இருக்கும். இந்த சீரியலுக்கு பின்பு இனியா, பெரும்பாலான ரசிகர்களால் தேனு என்றே அழைக்கப்பட்டார். ஐந்து வருடங்கள் ஓடி மிகப் பெரிய வெற்றி பெற்றது இந்த தொடர்.
தி எல்லோ பெஸ்டிவல் என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார். இந்த குறும்படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது. சீரியல் மட்டுமல்லாது திரைப்படங்களில் நடித்துள்ளார். 2016ம் ஆண்டு இவர் நாரதன் என்ற படத்தில் நடித்தார். பிறகு சிபிராஜ் நடிப்பில், ’ஜாக்சன் துரை’, ஆர்யா நடிப்பில் ‘யட்சன்’ ஆகியப் படங்களிலும் நடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பின்பு பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார். சின்ன குழந்தையாக இருந்தவர் வளர்ந்து சற்று குண்டாகவும் இருந்தார். உடனே சோஷியல் மீடியாவில் இவரின் பழைய புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்கள் ட்ரோல் செய்ய தொடங்கினார். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அந்த சீரியலில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி தொடரில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதில் இனியா பள்ளி செல்லும் மாணவியாக நடித்து வருகிறார். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் வீடியோக்களை அப்லோடு செய்து வருகிறார். இனியா பதிவிடும் புகைப்படங்களுக்கு ஒரு பக்கம் லைக்ஸ் வந்தாலும் கிண்டல் கேலிகளும் வந்து சென்றுகொண்டுதான் இருக்கிறது. உருவ கேலிகளை எல்லாம் கடந்துதான் இனியா தன்னுடைய திறமையை நடிப்பில் வெளிப்படுத்தி வருகிறார்.
பெயிண்டிங் உள்ளிட்ட கை வேலைப்பாடுகளை தனது அம்மாவுடன் இணைந்து செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். கிராஃப்ட்ஸ் சம்பந்தமான ஒர்க்ஷாப்களிலும் அம்மாவும் மகளும் தவறாமல் கலந்துக் கொள்கிறார்கள். இவருக்கு பிடித்த நடிகர் சிவகார்த்திக்கேயன். சின்னத்திரையில் இருந்து பெரியத்திரைக்கு போனவர் என்பதால் அவரை ரொம்பவும் பிடிக்குமாம். வெள்ளித்திரையில் வாய்ப்பை எதிர்நோக்கி நடித்து வருகிறார் நேஹா.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil