தற்போதுள்ள சின்னத்திரை ரசிகர்களுக்கு ரொம்பவே பரீட்சியமானவர் பல சீரியல்களில் அம்மா கேரக்டரில் நடித்து வரும் ராஜ்யலட்சுமி. ஆந்திராவின் தெனாலியில் பிறந்தவர். தனது குழந்தை பருவத்திலேயே நாடகக் குழுவில் இருந்த தனது தாயுடன் சிறிய நாடகங்களில் நடித்துள்ளார். 1980ல் முதன் முதலில் சங்கராபரணம் என்ற தெலுங்கு படத்தில் 'சாரதா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதன்பிறகு சங்கராபரணம் ராஜ்யலட்சுமி என்றே அறியப்பட்டார். சங்கராபரணத்தின் வெற்றிக்குப் பிறகு என். டி. ராமா ராவ், நாகேஸ்வர ராவ், ரஜினிகாந்த், பாலகிருஷ்ணா, சங்கர், மோகன்லால், திலீப், ஜிதேந்திரா, மம்முட்டி, விஷ்ணுவர்தன் உள்ளிட்ட இந்திய திரைப்படத் துறையின் அனைத்து பகுதிகளிலும் பல முக்கிய நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தார்.
Advertisment
சுஜாதா, கோடீஸ்வரன் மகள், மூன்று முகம், அதிசய பிறவிகள், அர்ச்சனைப் பூக்கள், கருடா சௌக்கியமா, நலந்தானா, இமைகள், நாணயம் இல்லா நாணயம், தேன் கூடு, கடிவாளம், மீண்டும் பல்லவி போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். 1990கள் வரை தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்தார். அதன்பின்னர் 1990 ஆம் ஆண்டில் கே. ஆர். கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டு நடிப்பிலிருந்து சில ஆண்டுகள் விலகினார். சிங்கப்பூரில் செட்டிலானார். மீண்டும் இந்தியா வந்தவர் ஆக்டிங்கை தொடர்ந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 2003ல் பரசுராம், டிரீம், பிரியசகி, திருப்பாச்சியில் விஜய் அம்மா, வரலாறு படத்தில் அஜித் அம்மா, எம்டன், திருப்பதி, சாது மிரண்டா, தனம், யாரடி நீ மோகினி, பிரிவோம் சந்திப்போம், குட்டி, உத்தம புத்திரன், சைவம், காலக்கூத்து என்ற இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு அம்மா ரோலில் நடித்தார். இதுவரை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
Advertisment
Advertisements
திரைப்படங்களில் நடித்து வந்தாலும் சின்னத்திரையையும் விடுவதாக இல்லை. 1991ல் தூர்தர்ஷனில் வெளியான பெண் என்ற தொடரில் நடித்தார். அதன் பின்னர் சன்டிவியில் ஒளிபரப்பான மேகலா, பிள்ளை நிலா, கண்மணியே போன்ற சீரியல்களில் நடித்தார். இவரை சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக்கியது 2013 முதல் 2015ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான தெய்வமகள் தொடர்தான். அதில் சத்யாவின் அம்மாவாக சம்பூர்ணம் சுந்தரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவர் மனதிலும் நீங்கா இடம்பிடித்தவர். தெலுங்கு சீரியல்களிலும் நடித்து வந்தார். மீண்டும் இவருக்கு ஹிட் கொடுத்தது விஜய் டிவி ராஜா ராணி, சன்டிவி அழகு சீரியல்தான். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி கேரக்டரில் பாக்கியா மாமியாராக நடித்து வருகிறார். அதேபோல் சன்டிவியின் அன்பே வா சீரியலிலும் நாயகன் வருணின் பாட்டியாக நடித்து வருகிறார்.
80's ஹீரோயினாக தொடங்கிய அவரது திரைப்பயணம் தற்போது சீரியலில் பாட்டியாக நடித்து வருகிறார். திரைத்துறையில் கிட்டதட்ட 41 வருடங்கள் பயணம் செய்துள்ளார். தற்போது தனது குடும்பத்துடன் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் வசிக்கிறார். தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நல்ல கதையம்சம் கொண்ட கேரக்டர்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் சங்கராபரணம் ராஜ்யலட்சுமி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"