விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், கல்லூரி சந்தை (College Bazar) கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று திறந்து வைத்தார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், "தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கல்லூரிகளில் சந்தைப்படுத்துவதற்காக, 5 கல்லூரியில் சந்தைகள் நடத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி, தெய்வானை அம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியானது, 22.07.2025 முதல் 24.07.2025 வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில், விழுப்புரம் மாவட்டத்தின் 32 அரங்குகளுடன், கடலூர், மதுரை, நாமக்கல், விருதுநகர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் சிவகங்ககை மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களின் அரங்குகளுடன் 46 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களும் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களும் தங்களது உற்பத்திப் பொருட்களான பேன்சி, கைவினைப் பொருட்கள், சின்னாளபட்டி சேலைகள், சிறுதானிய உணவுப் பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், மென்பொம்மைகள், கவரிங் போன்ற பொருட்கள் விற்பனைக்கு வைத்திடும் வண்ணம் உரிய அரங்குகள் அமைக்கப்படவுள்ளது.
இக்கண்காட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கலந்து கொண்டு தங்களது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யப்பட உள்ளதால், கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களுக்கு தேவையான மகளிர் சுயஉதவிக்குழுக்களால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களை வாங்கி பயன்பெறலாம். மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு அனைத்து கல்லூரி மாணவியர்களும் ஒத்துழைப்பு
நல்கிட வேண்டும்." என்று அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா.வெங்கடேஷ்வரன், திட்டம், திட்ட இயக்குநர் திருமதி.செந்தில்வடிவு, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் செந்தில்குமார், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி மாணவர் புல முதன்மையர் ராஜேஸ்வரி, முனைவர் ஜே.கலைமதி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - விழுப்புரம்.