Advertisment

திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலில் 150 கிலோ மெகா கொழுக்கட்டை படையல்; திரளான பக்தர்கள் வழிபாடு

விநாயகர் சதுர்த்தி; மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகர் சன்னதியில் தலா 75 என 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படையல்; பக்தர்கள் வழிபாடு

author-image
WebDesk
New Update
Trichy Malaikkottai Temple

விநாயகர் ஆவணி மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் சதுர்த்தி திதியில் அவதரித்தார். இந்த நாளே ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. நாம் எந்தச் செயலைச் செய்தாலும் அவை வெற்றிகரமாக முடிய வேண்டும் என்பதற்காக முதலில் வணங்கப்படும் முழு முதற் கடவுள் விநாயகப் பெருமான். ஒரு கொம்பு, இரு செவிகள் கொண்டு, மூன்று திருக்கரங்கள், நான்கு திருத்தோள்கள் என முழுமையாகத் தோன்றி, ஐந்து திருக்கரங்கள், ஆறெழுத்து மந்திரம் என அமைப்பாகக் கொண்டு விளங்குபவர் விநாயகப் பெருமான்.

Advertisment

மிருக வடிவத்தில் முகம் கொண்டு தேவ வடிவத்தில் உடல் கொண்டு, பூதக்கணங்களின் வடிவமாகக் கால்கள் கொண்டு காட்சி தரும் இவருக்கு அகிலம் போற்றும் அனைத்துத் தெய்வங்களின் "அம்சம்" யாவும் உருவமாக அமைந்துள்ளது. யானையின் தலை, துதிக்கை, காது இம்மூன்றும் சேர்ந்து "ஓம்" என்னும் பிரணவ மந்திரத்தை விளக்க வேண்டி ஓங்கார முகமுடையவராக திருக்காட்சி தருபவர் விநாயகப் பெருமான். விநாயகர் வழிபாடு அறியாமையை அகற்றும், அறிவைத் தூண்டும், கல்வியைப் பெருக்கும், செல்வத்தைக் கொடுக்கும். வலிமையை வழங்கும். சிவம் நிறைந்த வாழ்க்கையை உண்டாக்கி செம்மையாக சிறப்புறச் செய்யும் என்பது ஐதீகம்.

அந்த வகையில் முழு முதற் கடவுள் விநாயகரின் பிறந்த நாளான இன்று விநாயகர் சதுர்த்தி விழா உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, திருச்சி மலைக்கோட்டை கீழ் உள்ள மாணிக்க விநாயகர் சன்னதி மற்றும் மலை உச்சியில் உள்ள உச்சி பிள்ளையார் சன்னதி என இரண்டு சன்னதிகளில் தலா 75 கிலோ எடையுள்ள 150 கிலோ எடையுள்ள மெகா கொழுக்கட்டை படைக்கும் நிகழ்வு கடந்த 2004 ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 

அதே போன்று இந்த வருடம் மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகர் சன்னதியில் தலா 75 என 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை ஆனது படைக்கப்பட்டது. இந்த கொழுக்கட்டையில் அரிசி மாவு, வெள்ளம், பொட்டுக்கடலை, எள் போன்றவை சேர்த்து கடந்த 24 மணி நேரமாக மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்டு மடப்பள்ளியில் இருந்து தற்போது எடுத்து வரப்பட்டு மலை மேல் வீற்றிருக்கும் உச்சிப்பிள்ளையாருக்கும், மாணிக்க விநாயகர்க்கும் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. திரளான பக்தர்கள் உச்சி பிள்ளையார் கோவில் வந்து விநாயகரை வழிபட்டு வருகின்றனர்.

இதையொட்டி காலை முதலே விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கி 14 தினங்கள் நடைபெறும் திருவிழாவில் உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகர் சன்னதி மூலவருக்கு தினந்தோறும் சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும். மாணிக்க விநாயகர் உற்சவர் திருவிழா நாட்களில் மாலை 4:00 மணிக்கு பாலகணபதி, நாகாபரண கணபதி, லெஷ்மி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜகணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாரூடர்கணபதி, சித்திபுத்தி கணபதி மற்றும் நர்த்தன கணபதி ஆகிய பல்வேறு விஷேச அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி தருவார். விழாவிற்கான ஏற்பாடுகளை மலைக்கோட்டை கோயில் உதவி ஆணையர் அனிதா உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

மேலும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாநகரின் முக்கிய பகுதிகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டு ஆற்றில் கரைப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் திருச்சி மாநகரில் 242 சிலைகளும், மாவட்டம் முழுவதும் 1500 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த சிலைகளை வரும் 9 ஆம் தேதி நீர் நிலைகளில் கரைக்க உள்ளனர். இதற்காக மாநகர் முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trichy Vinayagar Chathurthi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment