/indian-express-tamil/media/media_files/5X4nK1glxOANDIX4ckNG.jpg)
ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. செல்வத்தின் அதிபதியாகவும், அறிவின் அடையாளமாகவும், ஞானத்தின் பெருங்கடலாகவும் கருதப்படும் விநாயகரை வழிபடுவதற்கு இந்த நாள் மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது. எந்தவொரு நல்ல காரியத்தையும் தொடங்குவதற்கு முன்பு விநாயகரை வணங்கி, அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவது இந்துக்களின் பாரம்பரியம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, ஆகஸ்ட் 27, 2025, புதன்கிழமை அன்று தொடங்குகிறது
பூஜை செய்யும் முறை
விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டை சுத்தம் செய்து வாசலில் மாவிலை தோரணங்கள் கட்டி வீட்டை அலங்கரிக்கலாம். பூஜை அறையில் சுத்தம் செய்து, அதன்மேல் ஒரு மனை வைத்து கோலம் இட்டு, தலை வாழை இலையை அதன்மேல் வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு நோக்கி இருப்பது அவசியம். இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி, அதன் நடுவில் களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலையை வைக்க வேண்டும்.
பிரியமான நைவேத்தியங்கள்
விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு மிகவும் பிடித்தமான உணவுகளைப் படைப்பது சிறப்பு. கொழுக்கட்டை, எள்ளுருண்டை, பாயசம் மற்றும் வடை ஆகியவற்றை நைவேத்யம் செய்யலாம். மேலும் பால், தேன், வெல்லம், முந்திரி மற்றும் அவல் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதையும் நைவேத்யம் செய்யலாம். இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் படிப்படியாக முன்னேற்றம் காண்பார்கள் என்றும், கடன் தொல்லைகளில் இருந்து மீண்டு வர முடியும் என்றும் நம்பப்படுகிறது.
விநாயகர் சிலை கரைத்தல்
பத்து நாள் கொண்டாட்டங்களுக்குப் பிறகு, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இந்த பாரம்பரியம், விநாயகர் நம் கவலைகள் அனைத்தையும் போக்கி, அவருடைய ஆசீர்வாதங்களை நமக்கு அளித்து செல்வதாக நம்பப்படுகிறது. இந்த ஆண்டு, விநாயகர் விசர்ஜனம் செப்டம்பர் 6, 2025, சனிக்கிழமை அன்று நடைபெறும்.
முக்கிய பூஜை நேரம்
சதுர்த்தி திதி: ஆகஸ்ட் 26 அன்று பிற்பகல் 1:54 மணிக்குத் தொடங்கி, ஆகஸ்ட் 27 அன்று பிற்பகல் 3:44 மணிக்கு முடிவடைகிறது.
விநாயகர் பூஜைக்கான மதிய நேர முஹூர்த்தம்: ஆகஸ்ட் 27 அன்று காலை 11:06 முதல் பிற்பகல் 1:40 வரை உள்ளது.
விநாயகர் சிலை வாங்க நல்ல நேரம்
விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 26 அன்று சிலை வாங்கியவர்கள், ஆகஸ்ட் 27 அன்று காலை 6 மணி முதல் 7:20 வரை வழிபடலாம். விநாயகர் சதுர்த்தி நாளான ஆகஸ்ட் 27 அன்றும் சிலைகளை வாங்கலாம். அந்த நாளில் காலை 6 மணி முதல் 7:20 வரை, காலை 9.10 மணி முதல் 10.20 வரையிலான நேரத்தில் விநாயகர் சிலையை வாங்கி வந்து, அதே நேரத்திற்குள் வழிபடலாம்.
விநாயகர் விசர்ஜனம் (சிலை கரைத்தல்):
பத்து நாள் கொண்டாட்டங்களுக்குப் பிறகு, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
பொதுவாக விநாயகர் சிலையை மூன்று அல்லது ஐந்து நாட்கள் வீட்டில் வைத்து வழிபட வேண்டும். விநாயகர் சதுர்த்தி நாளில் (ஆகஸ்ட் 27) சிலை வாங்கி இருந்தால், ஐந்தாவது நாளில் (ஆகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை) எடுத்துச் சென்று கரைக்கலாம். சிலையை கரைக்க எடுத்துச் செல்லும் போது ராகு காலம், எமகண்டம் இல்லாத நேரமாகப் பார்த்து செல்வது நல்லது. வீட்டில் சிலை இருக்கும் நாட்களில் தினமும் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மற்றும் சுண்டல் அல்லது இனிப்பு நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.
இந்த ஆண்டு, விநாயகர் விசர்ஜனம் செப்டம்பர் 6, 2025, சனிக்கிழமை அன்று நடைபெறும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.