கோவையின் பல்வேறு சிறப்புகளை கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோவை விழா நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு கோவை விழாவை முன்னிட்டு கோவை பந்தய சாலையில் உள்ள காஸ்மோ கிளப் வளாகத்தில் பழங்கால கார் கண்காட்சி நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் இன்று (ஜனவரி 5) தொடங்கி வைத்தனர். நூற்றுக்கு மேற்பட்ட பழங்கால கார்கள், பைக்குகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. கோவை, பல்லடம் , திருப்பூர் , அன்னூர் , பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களின் பழங்கால கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை காட்சிப்படுத்தி உள்ளனர். சுதந்திரத்துக்கு முன் பயன்படுத்திய பல்வேறு வகையான கார்கள் முதல் 1980-ம் ஆண்டு வரையுள்ள பழைய மாடல் கார்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன .

பழைய மாடல் பென்ஸ் , செவர்லே , ஃபோர்டு ,பத்மினி, அம்பாசிடர், வோக்ஸ்வேகன் உள்ளிட்ட கார்கள், புல்லட், ஜாவா, ஸ்கூட்டர், லேம்பர்டா, ஜெடாக் வகை இருசக்கர வாகனங்களும் இடம்பெற்று இருந்தன. முன்னதாக கார்கள் அனைத்தும் பந்தய சாலை பகுதியில் அணிவகுத்து வலம் வந்தன. இதை அங்கிருந்த மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கண்காட்சியில் இடம்பெற்று இருந்த இருசக்கர வாகனத்தில் இருவரும் ஒன்றாக அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை