திருப்பதி ஏழுமலையான் கோவில், அதன் ஆன்மீகப் பெருமைகளுக்கும், பாரம்பரிய நிகழ்வுகளுக்கும் பெயர் பெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றான ஆனிவார ஆஸ்தானம் இன்று (புதன்கிழமை) பக்திபூர்வமாக நடைபெற்றது. இந்த நாள், கோவிலின் ஆண்டு வரவு-செலவு கணக்குகள் பாரம்பரிய முறைப்படி தாக்கல் செய்யப்படும் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
ஆனிவார ஆஸ்தானத்திற்கு முந்தைய நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியளவில், கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சிறப்புத் தூய்மைப்பணி தொடங்கியது. சுமார் 5 மணிநேரம் நீடித்த இந்தத் தூய்மைப்பணியின்போது, பிரதான அர்ச்சகர்கள் ஆகம விதிமுறைகளின்படி பூஜைகள் செய்தனர். மூலவர் ஏழுமலையான் வெள்ளைநிற வஸ்திரத்தால் முழுவதுமாக மூடப்பட்டார்.
கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், சந்தன விழுது, குங்குமம் மற்றும் பிற நறுமணப் பொடிகள் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. மூலவர் கருவறை, தங்கக்கொடி மரம், பலிபீடம், தரைதளம், மேற்கூரை, பூஜை பொருட்கள், தூண்கள் போன்ற கோவில் பகுதிகள் அனைத்தும் தூய நீரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டன.
இந்தத் தூய்மைப்பணியில், திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜே.சியாமளா ராவ், தலைவர் பி.ஆர்.நாயுடு, மற்றும் கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி சா.வெங்கையா சவுத்ரி உள்ளிட்ட பல அதிகாரிகள், ஊழியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர். தூய்மைப்பணி நிறைவுற்றதும், மூலவர் மீது போர்த்தப்பட்ட வெள்ளை வஸ்திரம் அகற்றப்பட்டு, சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பிறகு, மதியம் 12 மணிக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தூய்மைப்பணி காரணமாக நேற்று அஷ்டதல பாத பத்மாராதனை சேவை, 6 மணிநேர தரிசனம், வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/16/tirupati-anivara-asthanam-2025-07-16-13-44-33.jpg)
ஆனிவார ஆஸ்தான நிகழ்வுகள்
இன்று காலை 7 மணிக்கு, தங்க வாயில் முன் உள்ள கண்டா மண்டபத்தில், சர்வபூபால வாகனத்தில் உபய நாச்சியார்களுடன் மலையப்பசாமியை கருடாழ்வாரை நோக்கி கொலுவாக அமர்த்தினார்கள். விஷ்வக்சேனர் ஒரு தனி மேடையில் தெற்கு நோக்கி கொலுவாக அமர்த்தப்பட்டார். அதைத்தொடர்ந்து மூலவருக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, பிரசாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
திருமலை பெரிய ஜீயர் சுவாமி, ஒரு வெள்ளித்தட்டில் 6 பெரிய பட்டாடைகளைத் தலையில் சுமந்து, மங்கள வாத்தியங்களுடன் மாடவீதி வழியாகக் கோவிலுக்குள் வந்து மூலவரிடம் சமர்ப்பித்தார். பின்னர், பெரிய ஜீயர், சின்ன ஜீயர் மற்றும் தேவஸ்தான அதிகாரிக்கு முறையாக 'லச்சனம்' என்னும் சாவி கொத்து வலது தோளில் போடப்பட்டது. ஆரத்தி, சந்தனம், தாம்பூலம், தீர்த்தம், சடாரி மரியாதைகளுடன் அந்தச் சாவிக்கொத்து மூலவர் ஏழுமலையான் பாதத்தில் வைக்கப்பட்டது.
இதன் பின்னர், கோவிலின் ஆண்டு முழுவதும் செய்யப்பட்ட வரவு-செலவு கணக்குகள் படித்துக் காட்டப்பட்டன. அத்துடன், ஆனிவார ஆஸ்தான நிகழ்வு நிறைவுபெற்றது.
மாலையில் புஷ்ப பல்லக்கு உற்சவம்
ஆனிவார ஆஸ்தானத்தைத் தொடர்ந்து, இன்று மாலை 6 மணிக்கு, உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி சர்வ அலங்காரத்தில் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். ஆனிவார ஆஸ்தானம் நடைபெற்றதால் இன்று கோவிலில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை, வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.