அழகு முகப் பொலிவிற்கு வீட்டிலேயே என்ன செய்யலாம்? டிப்ஸ்!

முகத்தையும் சருமத்தையும் வீட்டில் இருந்தபடியே எவ்வாறு பொலிவுடனும் பளபளப்பாகவும் வைத்துக்கொள்வது என்பது குறித்து சில டிப்ஸ்.

முகத்தையும் சருமத்தையும் செலவே இல்லாமல் பொலிவுடனும் பளபளப்பாகவும் வைத்துக்கொள்வது மிகவும் சுலபம். இதை மிக எளிதாக, வீட்டிலேயே செய்துகொள்ள முடியும்.

 • நன்கு கனிந்த வாழைப்பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து கழுவினால், முகம் மிருதுவாகும்.
 • சந்தனம், பால், கடலை மாவு, மஞ்சள் அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும் பளபளப்பாகவும் மாறும்.
 • தேங்காய்ப் பாலுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்தால் சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.
 • பன்னீர், சந்தனம், உலர்ந்த ரோசா இதழ்கள் மூன்றையும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால், தோலின் நிறம் பொலிவு பெறும்.
 • வேப்பிலை, துளசி மற்றும் புதினா இலைகளை சமமாக எடுத்து வெயிலில் காயவைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இந்தக் கலவையை ஒரு தேக்கரண்டி எடுத்து பன்னீருடன் சேர்த்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
 • வெயிலால் சருமத்தின் புத்துணர்ச்சி குறையும். அப்போது பாலில் ரோஜா இதழ்களை சிறிது நேரம் ஊற வைத்து அதை முகத்தில் தடவி கழுதி வந்தால் புதுப்பொலிவு ஏற்படும்.
 • ஒரு தேக்கரண்டி துளசி இலைச் சாற்றுடன் அரை தேக்கரண்டி தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் தோல் பளபளப்பாக மாறும்.
 • சருமம் கருக்காமல் இருக்க : புதினா, வேப்பிலை, குப்பைமேனி மற்றும் சிறிது மருதாணி இலைகளை காயவைத்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிதளவு எடுத்து பாலில் கலந்து முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் ஊற வைத்துக் குளித்தால் முகத்தில் வியர்க்குரு வராமலும் வெயிலில் கறுத்துப் போகமலும் இருக்கும்.

சருமப் பாதுகாப்பு

 

 • கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமானால் தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம் பழச்சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளித்தால் நாளடைவில் கருமை நிறம் போய்விடும். தோல் வறண்டும் சுருங்கியும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி சிறிது நேரம் ஊற வைத்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
 • வெயிலினால் ஏற்பட்ட கருமை மறைய ஆரஞ்சுப் பழத் தோலை வெயிலில் நன்றாக காயவைத்து பொடி செய்து, பாலுடன் கலந்து தோலில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வரவேண்டும்.
 • எலுமிச்சம் பழச்சாறு விட்டு கசகசாவை நன்றாக அரைத்து தினசரி தடவி வந்தால், சில தினங்களில் உடலில் ஏற்பட்ட கரும்படை மாறும்.
 • அரை தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு, இரண்டு தேக்கரண்டி புதினா சாறு ஆகியவற்றுடன் பயறு மாவை கலந்துகொண்டு இரவு படுக்கும் முன் முகத்தில் தட்வி பத்து நிமிடங்கள் ஊறிய பிறகு குளிர்ந்த நீரால் ஒத்தடம் கொடுத்தால் முகம் சுத்தமாகும், பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.
 • வேப்பிலைக் கொழுந்தைப் பறித்து அரைத்து முல்தானி மிட்டி பவுடரை சேர்த்து முகத்தில் தடவி வந்தால் எண்ணெய்ப்பசை குறைந்து பருக்கள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.
 • பெண்களுக்கு முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, சோளமாவு, முட்டையின் வெள்ளைக் கரு, சர்க்கரை இம்மூன்றையும் பசை போல ஆகும் வரை ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவி காய்ந்தவுடன் மெதுவாக எடுத்தால் முடியும் எளிதில் வந்துவிடும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close