இன்றைக்கு இளம் வயதினரைக்கூட விட்டுவைக்காமல், பரவிக் கொண்டேயிருக்கிறது தொப்பை. அதோடு உடல் பருமன் பிரச்னையும் அதிகமாகியிருக்கிறது. பல உடல்நலக் கோளாறுகளுக்கு அடித்தளமாக இருப்பவை இந்த இரு பிரச்னைகளும். உடல் பருமனைக் குறைக்கவும், தொப்பையைக் குறைக்கவும் யோகாவில் சில வழிமுறைகள் இருக்கின்றன.
மன அமைதி, நிம்மதியான தூக்கம், மனதை ஒருநிலைபடுத்துதல் என உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் யோகா அளிக்கும் பலன்கள் ஏராளம். வயது, எடை, உயரம், பாலினம் என எதையும் பார்க்காமல் யார் வேண்டுமானாலும் யோகா செய்யலாம்.
அப்படி உடல் எடை குறைய உதவும் 3யோகா பயிற்சிகள் இங்கே
தனுராசனம்
குப்புறப்படுத்து செய்யும் பயிற்சி இது.
இரண்டு கால்களையும் மடித்து கைகளால் கோர்த்துப் பிடித்துக்கொள்ள வேண்டும். இயல்பான சுவாசத்தில் 30 விநாடிகள் அப்படியே இருக்க வேண்டும். இதேபோல் மூன்று முறை செய்ய வேண்டும். இந்தப் பயிற்சி வயிற்றில் உள்ள தசைகளை வலுப்படுத்தும், கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.
பவனமுக்தாசனம்
படுத்த நிலையில் செய்யும் பயிற்சி.
இரண்டு கால்களையும் கோர்த்துப் பிடித்து இயல்பான சுவாசத்தில் 30 விநாடிகள் செய்ய வேண்டும். இதேபோல் மூன்று முறை செய்ய வேண்டும்.
பாதஹஸ்தாசனம்
நின்று கொண்டு செய்யும் பயிற்சி. நேராக நிமிர்ந்து நின்று, கைகளை தலைக்கு மேலாக உயர்த்தி, மூச்சை வெளியிட்டபடி முன்னோக்கி வளைய வேண்டும். இந்தப் பயிற்சியைச் செய்தால் அடிவயிற்றில் சேர்ந்திருக்கும் கொழுப்பு குறையும்.
இதுதவிர சூரிய நமஸ்காரம், ஜானுசிரசாசனம் போன்ற யோகா பயிற்சிகளையும் நீங்கள் செய்யலாம்.
யோகா, உணவுக் கட்டுப்பாடு போன்றவற்றை முறையாகக் கடைப்பிடித்தால் ஒரே மாதத்தில் இரண்டு கிலோ வரை எடை குறைக்கலாம். யோகா பயிற்சிகளுடன் நடைப்பயிற்சியும் செய்தால், விரைவில் பலன் கிடைக்கும்.
அதே நேரத்தில் எடை குறைதல் என்பது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும். எடையைக் குறைப்பதற்கான பயிற்சிகளை மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு தொடங்குவது நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“