/indian-express-tamil/media/media_files/2025/04/20/yqT1O94uVNNgAlfLvGTR.jpg)
இந்த கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, இந்த காலநிலை கர்ப்பிணிகளுக்கு மிகுந்த சவாலாக இருக்கும். கர்ப்பிணிகள் மட்டுமின்றி கருவில் இருக்கும் குழந்தைக்கும் தண்ணீர் தேவையான விஷயம். ஏனெனில், இரத்தம் மூலமாக குழந்தைக்கு ஊட்டச்சத்தை கடத்துவதற்கு தண்ணீர் முக்கிய தேவையாக இருக்கிறது என்று மருத்துவர் சுருசி தேசாய் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: What does dehydration during pregnancy look like? Signs to watch out for
"குழந்தைக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கு நஞ்சுக்கொடியை உருவாக்க நீர் உதவுகிறது. இது அம்னோடிக் திரவத்தை உற்பத்தி செய்வதற்கும் உதவுகிறது" என்று அவர் கூறியுள்ளார்.
கவனிக்க வேண்டிய அறிகுறிகள்
தலைவலி, தலைச்சுற்றல், அசதி மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் ஆகியவை சாதாரணமானவர்களுக்கு நீர்ச்சத்து குறையும் போது ஏற்படும் அறிகுறிகள் ஆகும். ஆனால், கர்ப்பிணிகளுக்கு இந்த அறிகுறிகளில் சிறிது மாற்றம் இருக்கும்.
பெங்களூரில் உள்ள ஆஸ்டர் சி.எம்.ஐ மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத்தின் முன்னணி ஆலோசகர் மருத்துவர் என். சப்னா லுல்லா, கர்ப்ப காலத்தில் நீர்ச்சத்து குறைபாட்டை குறிக்கும் அறிகுறிகள் குறித்து தெரிவித்துள்ளார்.
1. நீர்ச்சத்து குறையும் போது தாகம், வாயில் வறட்சித் தன்மை மற்றும் சோர்வு ஆகியவை கர்ப்பிணிகளுக்கு ஏற்படும்.
2. நீர்ச்சத்து குறையும் போது கர்ப்பிணிகளின் சிறுநீர் அடர் நிறத்தில் இருக்கும். மேலும், சிறுநீர் கழிப்பதில் சிரமம் மற்றும் தலைச்சுற்றல் போன்றவை எப்போதாவது ஏற்படும்.
3. தலைவலி, இதயத் துடிப்பு அதிகரிப்பு மற்றும் மயக்கம் போன்றவையும் கர்ப்பிணிகளுக்கு நீர்ச்சத்து குறையும் போது ஏற்படக் கூடும்.
நீர்ச்சத்து குறைபாட்டை உடனடியாக சீரமைக்க தவறினால், அது கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே, கர்ப்பிணிகள் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். குறிப்பாக, வெப்பமான சூழல் நிலவும் போது போதுமான தண்ணீரை அவர்கள் அருந்த வேண்டும்.
நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது எப்படி?
1. தினமும் குறைந்தது 8 - 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இது, தனிப்பட்ட ஆரோக்கியம், செயல்பாட்டு நிலை மற்றும் காலநிலை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.
2. பழங்கள், காய்கறிகள் மற்றும் சூப்கள் போன்ற உணவுகளையும் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை உடலில் நீர்ச்சத்தை உறுதி செய்கின்றன.
3. கஃபின் உட்கொள்வதைக் கட்டுப்படுத்துங்கள். ஏனெனில், இது ஒரு டையூரிடிக் ஆக செயல்படுகிறது. இது அதிக சிறுநீர் கழிக்க வாய்ப்பாக அமையும். இதனால் நீரிழப்புக்கு வழிவகுக்கக் கூடும்.
4. சர்க்கரை பானங்களையும் தவிர்க்க வேண்டும். அவை தற்காலிகமாக தாகத்தைத் தணித்தாலும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பயனளிக்காது. இவை உடல் எடை அதிகரிப்பு மற்றும் இரத்த சர்க்கரை பிரச்சனைகளுக்கு பங்களிக்கும்.
5. கர்ப்பமாக இருக்கும் போது புத்துணர்ச்சிக்காக எலுமிச்சை, வெள்ளரி அல்லது புதினா போன்றவற்றை தண்ணீருடன் சேர்த்து பருகலாம்.
எனவே, இது போன்ற வழிமுறைகளை பின்பற்றி கர்ப்பிணிகள் தங்களது ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.