ஆண்களிடையே 'ப்ளூ பால்ஸ்' என்ற சொல் மிகவும் பரிச்சயமானது. குறிப்பாக, ஆண்களுக்கு ஏற்படும் அசொகரியம் குறித்து சக ஆண்கள் நகைச்சுவையாக கூறும் சொல்லாக இது பார்க்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: What exactly are ‘blue balls’ and are they dangerous?
இதற்கான விளக்கத்தை பெங்களூரு ரீகல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மூத்த ஆலோசகரும், சிறுநீரக மருத்துவருமான சூரி ராஜு குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில், 'ப்ளூ பால்ஸ்' என்பது மருத்துவ சொல் அல்ல என்று அவர் கூறுகிறார். எபிடிடிமல் ஹைப்பர் டென்ஷன் (EH) என்ற தற்காலிக நிலையை இவ்வாறு அழைக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னால் உள்ள அறிவியல் என்ன?
பாலியல் தூண்டுதல்: உங்கள் பாலியல் தூண்டுதலின் போது, உங்களுடைய பிறப்புறுப்புக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் அப்பகுதி வீங்கி விடும்.
சிரை கட்டுப்பாடு: விறைப்புத்தன்மையை பராமரிக்க அந்த பகுதியில் இருந்து இரத்தத்தை வெளியேற்றுவதற்கு காரணமான நரம்புகள் சற்று சுருங்கி விடுகின்றன.
அழுத்தம் அதிகரிப்பு: நீங்கள் விந்து வெளியேறவில்லை என்றால், கூடுதல் இரத்தம் மற்றும் திரவம் சிறிது நேரம் அதே இடத்தில் நிறுத்தி வைக்கப்படும். இதனால் விதைப்பைகளில் அழுத்தம் மற்றும் அசௌகரியம் ஏற்படுகிறது.
சாத்தியமான நீண்ட கால சுகாதார அபாயங்கள்
"நல்ல செய்தி என்னவென்றால், 'ப்ளூ பால்ஸ்' பொதுவாக பாதிப்பில்லாதவை மற்றும் நீண்ட கால ஆரோக்கிய அபாயங்களை ஏற்படுத்தாது. இந்த அசௌகரியம் சில நிமிடங்களில் அல்லது சில மணிநேரங்களில் தானாகவே குறைகிறது.
இருப்பினும் வலி அதிகமாக இருந்தாலோ அல்லது காய்ச்சல் மற்றும் வீக்கம் உள்ளிட்ட பிற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இது தொற்று அல்லது விதைப்பையில் இருக்கும் வேறு ஏதேனும் பிரச்சனையாக இருக்கலாம்" என்று மருத்துவர் சூரி ராஜு கூறுகிறார்.
அசௌகரியத்தை போக்க மிகவும் பயனுள்ள வழிகள்
மருத்துவர் சூரி ராஜு குறிப்பிட்டுள்ளபடி, அசௌகரியத்தைப் போக்க சில வழிகள் உள்ளன:
விந்து வெளியேறுதல்: சுய இன்பம் அல்லது பாலியல் உறவில் ஈடுபடுவதன் மூலம் இதற்கு தீர்வு காண முடியும்.
கவனத்தை திசை திருப்புதல்: உடலுறவு அல்லாத செயல்களில் ஈடுபடுவது உங்கள் உடலை அசௌகரியத்தில் இருந்து திசை திருப்ப உதவுகிறது.
உடல் செயல்பாடு: உடற்பயிற்சியானது, பிறப்புறுப்புலிருந்து இரத்த ஓட்டத்தை திசை திருப்பவும், அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.
'ப்ளூ பால்ஸ்' என்பது ஆண்களிடையே ஒப்பீட்டளவில் பொதுவான அனுபவமாகும். அதிலும், இளமை பருவத்தில் இதுபோன்ற நிலை இருக்கும். "இருப்பினும், இதனை அடிக்கடி உணர்ந்தால் அல்லது வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும்" என்று மருத்துவர் சூரி ராஜு தெரிவித்துள்ளார்.
நினைவில் கொள்ளுங்கள்: ஒரு நபரை பாலியல் உறவுக்கு உட்படுத்த 'ப்ளூ பால்ஸ்'-ஐ ஒரு காரணமாக ஒரு போதும் பயன்படுத்தக் கூடாது. பாலியல் உறவில் ஈடுபடப் போகும் நபரின் சம்மதம் மிக முக்கியம். எந்த நேரத்திலும், யார் வேண்டுமானாலும் விருப்பம் இல்லை என்று சொல்ல உரிமை இருக்கிறது.