/indian-express-tamil/media/media_files/2025/08/18/eating-rice-for-a-month-2025-08-18-15-54-30.jpg)
ஒரு மாதம் அரிசி சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும்? ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுமா? நிபுணர் விளக்கம்
ஆசியாவில் பலருக்கு, குறிப்பாகத் தென்னிந்தியாவில் அரிசி என்பது ஒரு வேளை உணவு மட்டுமல்ல; அதுவே அன்றாட வாழ்வின் அடிப்படை. ஆனால், உடல் எடை குறைப்பு, குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் பிரபலமாகி வருவதால், ஒரு மாதத்திற்கு அரிசியை முழுமையாக நிறுத்துவது பற்றி பலர் யோசிக்கின்றனர்.
ஒரு மாதம் அரிசியைச் சாப்பிடுவதை நிறுத்தினால், உடலில் என்ன நடக்கும்? இதற்கான பதில், அரிசி நல்லது, கெட்டது எனச் சொல்வதுபோல எளிதல்ல. அரிசிக்கு மாற்றாக என்ன சாப்பிடுகிறீர்கள், உங்கள் ஒட்டுமொத்த உணவுமுறை, மற்றும் உங்கள் உடலின் ஊட்டச்சத்துத் தேவைகள் ஆகியவற்றைப் பொறுத்தது.
அரிசியை நிறுத்துவதால் ஏற்படும் மாற்றங்கள்
ஊட்டச்சத்து நிபுணர் அதிதி பிரபு கூறுகையில், நாம் பெரும்பாலும் சாப்பிடும் வெள்ளை அரிசி, குறைந்த ஊட்டச்சத்து கொண்ட எளிய கார்போஹைட்ரேட் மூலமாகும். அரிசியை நிறுத்துவதால், ஆரம்பத்தில் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அவர் பின்வருமாறு கூறுகிறார்:
அரிசியை நிறுத்தும் போது, உங்கள் ஆற்றல் அளவு குறையலாம். பசி உணர்வு அதிகரிக்கக்கூடும். இந்த ஆரம்பக்கட்ட மாற்றங்கள் ஒரு சில நாட்களில் சரியாகிவிடும். இதற்கு பின் உங்கள் ஒட்டுமொத்த உணவு கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பு ஆகியவற்றில் சமநிலையில் இருந்தால், ஆற்றல், வளர்சிதை மாற்றம், மற்றும் பசி உணர்வு ஆகியவை சீராகிவிடும்.
ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுமா?
அதிதி பிரபுவின் கூற்றுப்படி, நாம் பொதுவாக உண்ணும் நன்கு மெருகூட்டப்பட்ட வெள்ளை அரிசியில் குறைந்த நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி போன்ற சில ஊட்டச்சத்துக்கள் மட்டுமே உள்ளன. எனவே, இந்த அரிசியை தவிர்ப்பதால் பெரிய அளவில் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படாது. ஆனால், மெருகூட்டப்படாத அல்லது ஓரளவிற்கு மெருகூட்டப்பட்ட அரிசி வகைகளில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதுபோன்ற அரிசி வகைகளைச் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, அதற்கு மாற்றாக வேறு எந்த முழு உணவையும் எடுத்துக்கொள்ளவில்லை என்றால், வைட்டமின் பி மற்றும் சில நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தச் சிக்கலைத் தவிர்க்க, முழு உணவுகளை மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அரிசிக்கு ஆரோக்கியமான மாற்று உணவுகள்
அரிசிக்கு மாற்றாகச் சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவுகள் பல உள்ளன. அவை அரிசியை விட அதிக கார்போஹைட்ரேட், புரதங்கள், கொழுப்புகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களைக் கொண்டவை. சிறு தானியங்களான ராகி, கம்பு, தினை, சாமை, வரகு சாப்பிடலாம். Pseudo Millets குயினோவா, பக்வீட், ராஜ்ஜிரா. முழு தானியங்களான கோதுமை, பார்லி, ஓட்ஸ், மாவுச்சத்து நிறைந்த காய்கறிகளான சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு ஆகியன ஆகும்.
சர்க்கரை அளவும் உடல் எடையும்
சர்க்கரை அளவு: ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்கள், வெள்ளை அரிசியை அதிக அளவில் சாப்பிடும் போது சர்க்கரை அளவு அதிகரிக்கும். அதே சமயம், மெருகூட்டப்படாத அரிசியை, சரியான அளவில் காய்கறிகள் மற்றும் புரதத்துடன் சேர்த்துச் சாப்பிடும் போது சர்க்கரை அளவைச் சிறப்பாக நிர்வகிக்கலாம்.
உடல் எடை: அரிசியை எடைபோடாமல் சாப்பிடும் பழக்கம், உடல் எடை அதிகரிப்புக்கு ஒரு முக்கியக் காரணமாகும். ரொட்டி அல்லது சிறு தானியங்களைச் சாப்பிடுவதை விட, வெள்ளை அரிசியை அதிக அளவில் சாப்பிடுவது எளிது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், குறைந்த அளவில் மெருகூட்டப்படாத அரிசியை, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் புரதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம் என்று அதிதி பிரபு பரிந்துரைக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.