டி.ஐ. ரவீந்திரன்
இப்போதெல்லாம் பெரும் நிறுவனங்களின் அதிபர்களே விளம்பர மாடல்களாக ஆகிவிட்டனர். இவர்களுக்கெல்லாம் முன்னோடி, பதினைந்து வருடங்களுக்கு முன்னால் சென்னையில் இருந்த பெரிய, பிரபலமான நகைக்கடையின் உரிமையாளர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். அதையே விளம்பர வாசகமாக்கி விட்டனர். ‘புன்னகை அதிபரின் பொன் நகைக் கூடம்’.
நாம் எங்கு சென்றாலும் யாராவது ஒருவர் நம்மைப் பார்த்துப் புன்னகைத்தால், நமக்கு, ‘அப்பாடா’ என்றிருக்குமல்லவா? புன்னகையின் சக்தி அப்படி. அதற்கு வேறு பயன்களும் இருக்கின்றன. எல்லாமே விஞ்ஞான ரீதியில் உண்மையானவை. புன்னகை நம்மை வசீகரமானவராகக் காட்டும். நம்மை அழகாகக் காட்டுவதற்கு நூற்றுக்கணக்கில் செலவழிக்கிறோம். என்னதான் பூச்சு, அலங்காரம் இருந்தாலும் அதனுடன் உண்மையான புன்னகை இல்லையானால் எப்படியிருக்கும்? அழகை வசீகரமாக்குவது புன்னகைதான்.
மனநிலையைச் சீராக்கும் புன்னகை
அடுத்த முறை டென்ஷனாக இருக்கும்போது, வேண்டுமென்றே புன்னகைத்துப் பாருங்கள். நாம் நமது வீட்டில் ஏதோ வாக்கு வாதத்தில் ஈடுபட்டு இருக்கிறோம். அப்போது நண்பர், விருந்தாளி, தெரிந்தவர், வருகிறார். உடனடியாக நாம் வலிந்த புன்னகையுடன் வரவேற்போம்.அடுத்த சில நிமிடங்களில் புறப்பட்டுப் போயிருப்பார். வருகையின் காரணம் அவ்வளவு முக்கியமாக இருந்திருக்காது. ஆனாலும் சண்டை முந்தின வேகத்தில் நிச்சயம் இருக்காது. புன்னகைக்கு அந்த அளவுக்கு வலிமை.
பரவும் புன்னகை
இருவர் இருந்தாலும் இருபது பேர் இருந்தாலும், ஒரே நபர் புன்னகைத்தாலும் அனைவருக்கும் பரவும். அந்த இடத்தின் நிலையே மாறிவிடும். நேர்மறைச் சிந்தனையில் தொடர்ந்து இருக்க உதவும். ஒரு சிறிய சோதனை செய்து பாருங்கள். உண்மையாகப் புன்னகையுங்கள். அப்போது வேண்டுமென்றே எதிர்மறையான எண்ணம் ஒன்றை வலிந்து நினைத்துப் பாருங்கள். அப்போது புன்னகை மறையக் கூடாது. மிகவும் கடினமாக இருக்கிறது இல்லையா?
புன்னகையால் விளையும் நன்மைகள்
ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். சிறிது நேரம் இயல்பாக உட்கார்ந்திருங்கள். ரத்த அழுத்தத்தை சோதியுங்கள். அதைக் குறித்துக் கொள்ளுங்கள். அதன் பின் ஒரு நிமிடம் ஏதாவது நல்ல விஷயத்தை நினையுங்கள். அதன் பின் மறுபடியும் ரத்த அழுத்த சோதனை செய்யுங்கள். நிச்சயமாக ரத்த அழுத்த நிலை குறைந்தே இருக்கும்.
புன்னகையே மருந்து
புன்னகைக்கும்போது உடலில் தெம்பூட்டும், உற்சாகமூட்டும் எண்டோர்பின்ஸ், இயற்கையான வலி குறைப்பான்கள், மற்றும் செரோடொனின் போன்றவை சுரக்கும். இதனால் உடலெங்கும் நல்ல உணர்ச்சி பரவும். இது தொடர்ந்து நடந்தால், உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் சாதாரண தொற்றுகளிலிருந்து, பெரிய வியாதிகள் வரை வராமல் புன்னகை தடுக்கும்.
டென்ஷன் தொலையப் புன்னகை
நாம் மனதளவில், உடலளவில், சோர்ந்து, களைத்து இருக்கிறோம் என்பதை மறைக்க நூறு வார்த்தைகளுக்குப் பதிலாக ஒரு புன்னகை போதும். டென்ஷனாக இருக்கும்போது சிறிது நிதானித்து புன்னகைத்தால், உடலில் தெம்பூட்டும் வேதியப் பொருட்கள், ஹார்மோன்கள் வெளிப்படும். இதனால் உடலில் தெம்பு வரும். நிலைமையை சரியாக்க பல யோசனகள் உதிக்கும். ஆகையால் புன்னகையுங்கள்.செலவின்றி அனைத்து வகையிலும் லாபம் பெற உதவும். புன்னகைக்க முகத்தில் 17 தசை நார்கள் வேலை செய்தால் போதும். முகம் சுளிக்க? 43 தசை நார்கள் வேலை செய்ய வேண்டும். இப்போது சொல்லுங்கள் அனைத்தையும் மறந்து புன்னகைக்கலாம் அல்லவா!