ஆத்மார்த்த நண்பர்களால் உலகை சுற்றிப்பார்க்க நம்பிக்கையுடன் புறப்படும் மாற்றுத்திறனாளி!

நண்பர்கள் கேவன் சாண்டிலருக்கு கிடைத்ததால் தான் உலகம் முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்ற கனவு உண்மையாகிக் கொண்டிருக்கிறது.

ஆத்மார்த்தமான, உண்மையான நண்பர்கள் இருந்தால் சாத்தியமில்லாதவற்றையும் சாத்தியமாக்கிவிடலாம். அப்படி சில நண்பர்கள் கேவன் சாண்டிலருக்கு கிடைத்ததால் தான் உலகம் முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்ற கனவு உண்மையாகிக் கொண்டிருக்கிறது.

கேவன் சாண்டிலர் ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி எனும் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். அதனால், சக்கர நாற்காலியில் தான் தன்னுடைய வாழ்க்கைய அவர் கழித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அவருக்கு உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது கனவு.

அதனை அறிந்த சில நல்லுள்ளம்கொண்ட நண்பர்கள் ‘வீ கேரி கேவன்’ (We carry Kevan) எனும் திட்டத்தை துவங்கி, அவருடைய பயணக் கனவுகளை ஒவ்வொன்றாக சாத்தியமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

கேவனை தோளில் சுமந்துகொண்டு பயணப்படுகின்றனர் இந்த நண்பர்கள். ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டுள்ள கேவனின் அடுத்த பயணம் சீனாவை நோக்கி.

“மாற்றுத்திறனாளியாக இருப்பதென்பது தவறு இல்லை, தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. என்னால் நடக்க முடியாது. என்னுடைய இயலாமை என்பது ஒரு பகுதிதான், ஆனால் அதுவே என் முழுமையானது இல்லை. நான் அமர்ந்திருக்கும் சக்கர நாற்காலியை வைத்து என்னை வரையறுக்க முடியாது.”, என கேவன் பெருமிதத்துடன் கூறினார்.

வாழ்க்கையோ, பயணமோ, ஒருவருக்கொருவர் துணையுடன் இருப்பதுதான் நட்பு என கேவன் கூறுவது எவ்வளவு உண்மை.

×Close
×Close