ஆடி மாதம் என்றாலே திருவிழாக் காலம்தான், ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த நாள், இந்த ஆடி மாதத்தில் அம்மனை பக்தியுடன் வழிபட்டால் வாழ்க்கையில் நலம் உண்டாகும் என்பது நம்பிக்கை. ஆடிப் பூரத்தில் அம்மனுக்கு வளைபூட்டி வழிபட்டால், திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும், பிரிந்த கணவன், மனைவி ஒன்று கூடுவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
இந்த ஆண்டு ஆடிப் பூரம் எப்போது வருகிறது, ஆடிப் பூரத்தில் திருமண தடை நீங்க, குழந்தை வரம் கிடைக்க என்னென்ன வழிபாடுகள் செய்யலாம் என்பதை ஆன்மீகம் குறிப்புகள் யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளனர்.
ஆடிப் பூரம் எப்போது கொண்டாடுவோம் என்றால் ஆடிமாதத்தில் பூரம் நட்சத்திரம் என்றைக்கு இணைந்து வருகிறதோ, அந்த நாளை ஆடிப் பூரமாகக் கொண்டாடுவார்கள். ஆடிப் பூரம் நாளில் எல்லா கோயில்களிலும் அம்மனுக்கு வளை பூட்டுகிற நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெறும். அம்மனுக்கு வளைபூட்டுவதால் வாழ்க்கையில் பல நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வைணவத்தில் 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளின் பிறந்த நட்சத்திரம் பூரம் நட்சத்திரம் ஆகும். ஆடிப் பூரம் ஆண்டாள் அவதரித்த நாள் என்பதால் ஆடிப் பூரத்தை ஆண்டாள் ஜெயந்தி என்றும் கொண்டாடுகிறார்கள். ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கோயிலில் ஆடிப் பூரத்தில் ஆண்டாள் ஜெயந்தியை 10 நாட்கள் விமர்சையாகக் கொண்டாடுகிறார்கள். 10-வது நாளில் ஆண்டாள் கோலத்தை தரிசித்தால், திருமணமாகாத பெண்களுக்கு திருமணத் தடை நீங்கும். குழந்தைப் பேறு இல்லாதவர்களுகு குழந்தைப் பேறு கிடைக்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள் என்பது நம்பிக்கை.
பொதுவாக திருமணமாகி கருவுற்ற பெண்களுக்கு 5-வது மாதத்தில் வளைபூட்டும் நிகழ்வு நடைபெறும். அதன்படி, பங்குனி உத்தரத்தில் தெய்வங்களுக்கு எல்லாம் திருமணம் நடைபெற்றதாக நம்பிக்கை. திருமணம் முடிந்த 5-வது மாதத்தில் அம்மன் கருவுற்று இருப்பதாக நம்பப்பட்டு ஆடி மாதத்தில் வளைபூட்டுவது நடைபெறுகிறது.
ஆடி பூரத்துக்கு முன்பே, அம்மன் கோயிலுக்கு வளையல் வாங்கிக் கொடுத்துவிடுங்கள், அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட வளையல் ஆடிப் பூரம் அன்று வாங்கி வந்து அணிந்துகொண்டால், திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். பிரிந்த கணவன் மனைவி விரைவில் ஒன்று சேர்வார்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். ஆண்களாக இருந்தால் கோயிலுக்கு வளையல் வாங்கிக் கொடுங்கள். அந்த வளையலை வாங்கி வந்து வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். திருமணம் கைகூடும்.
வீட்டில் அம்மனுக்கு வளையல் மாலைக் காட்டி சாத்தினால், குழந்தைப் பேறு கிடைக்கும். ஒற்றைப்படை எண்ணிக்கையில் வளையல் மாலை கட்டி அம்மனுக்கு சாத்த வேண்டும். அன்றைக்கு வளைகாப்புக்கு செய்வது போல, 3 வகை சாதம், 5 வகை சாதம் செய்து படைக்கலாம்.
இத்தகைய சிறப்பு மிகு ஆடிப் பூரம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி புதன்கிழமை அதாவது ஆடி மாதம் 22-ம் தேதி வருகிறது. பூரம் நட்சத்திரம் சரியாக ஆகஸ்ட் 6-ம் தேதி அதாவது ஆடி மாதம் 21-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5.43 மணிக்கு தொடங்குகிறது. இந்த பூரம் நட்சத்திரம் ஆகஸ்ட் 7-ம் தேதி இரவு 8.30 மணிக்கு முடிகிறது.
ஆடிப் பூரம் நாளில் வழிபாடு செய்வதற்கான உகந்த நேரம், குளிகை நேரத்தில் செய்வது சிறப்பு. ஆகஸ்ட் 7-ம் தேதி காலை 10.48 முதல் நண்பகல் 12.27 வரை குளிகை நேரம் இந்த நேரத்தில் அம்மனுக்கு வலைபூட்டி வழிபடலாம். இந்த பூஜையை செய்தால், திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் நல்ல பலன் கிடைக்கும். அதே போல, குளிகை நேரத்தில் வழிபாடு செய்யவில்லை என்றால், ராகுகாலம், எமகண்டம் ஆகிய நேரங்களைத் தவிர்த்துவிட்டு மற்ற நேரங்களில் இந்த ஆடிப் பூரம் வளைகாப்பு வழிபாடு செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.