தியாகத் திருநாள் அல்லது பக்ரித் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் அராபிய மாதம் துல் ஹஜ் 10-ம் நாள் கொண்டாடப்படுகின்றது. இந்த பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் மெக்கா நகரில் உள்ள புனித காபாவை நோக்கி 'ஹஜ்' எனப்படும் புனிதப்பயணம் மேற்கொள்கின்றனர். இது இவர்களின் அடிப்படை கடமைகளில் ஐந்தாவது கடமை ஆகும். இதன் பேரில் இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. பெரும்பாலும் உலகம் முலுவதும் இந்த பண்டிகை தியாகப் பெருநாள் என பொருள்படும் அரபிய பதமான ஈத் அல்-அதா என்றே அழைக்கப்பட்டாலும், தமிழ் நாட்டில் ஆட்டை பலியிடுவதை அடிப்படையாக கொண்டு பக்ரித் (பக்ரு-ஆடு + ஈத்-பெருநாள்) என்ற உருது பதத்தில் அழைக்கப்படுகின்றது.
இந்தாண்டு ஆகஸ்ட் 23ம் தேதி பக்ரித் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சிறப்புத் தொழுகை நடத்தப்படுவது தியாகத்திருநாளின் முக்கிய அம்சம் ஆகும். உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள், இந்த நாளில் புத்தாடை அணிந்து இந்த தொழுகையில் கலந்து கொள்கின்றனர். பலியிடல் தியாகத் திருநாளின் ஒரு சிறப்பம்சம் ஆகும். இந்த நாளில் இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிடுகின்றனர். பின்னர் அதன் இரைச்சியை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பலியிடப்படும் விலங்கு ஊனம் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படுகின்றது.