நீங்கள் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் பாட்டிலை வாங்கும்போது, அதன் மூடியின் நிறத்திற்கு கவனம் செலுத்துவதுண்டா? சமூக வலைத்தளங்களில், சிவப்பு, நீலம், பச்சை, வெள்ளை, கருப்பு போன்ற ஒவ்வொரு நிறமும் ஒரு குறிப்பிட்ட வகை தண்ணீரைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த கூற்றுக்களில் ஏதேனும் உண்மை உள்ளதா? இதைப் பற்றி விரிவாக ஆராய்ந்து பார்க்க நிபுணர்களை அணுகினோம்.
ஆங்கிலத்தில் படிக்க:
தானேவில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையின் உள்மருத்துவ ஆலோசகர் டாக்டர் அனிகேத் முலே, ஒரு பாட்டில் மூடியின் நிறம் பெரும்பாலும் குடிக்கப்படும் தண்ணீரின் வகையைக் குறிக்கிறது என்று குறிப்பிட்டார். “சிலர் இதை பிராண்டிங்கிற்காக மட்டுமே என்று நினைத்தாலும், உற்பத்தியாளர்கள் வெவ்வேறு வகை தண்ணீரை, அதாவது காரத்தன்மை கொண்ட, மினரல் அல்லது ஃபிளேவர்ட் வாட்டரை வேறுபடுத்திக் காட்ட நிறங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த வண்ணக் குறியீடுகளுக்கு எந்த மருத்துவ அல்லது ஒழுங்குமுறை விதிகளும் இல்லை, எனவே நீங்கள் என்ன குடிக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள லேபிலைச் சரிபார்ப்பது எப்போதும் பாதுகாப்பானது” என்று டாக்டர் முலே கூறினார்.
வெவ்வேறு நிறங்களில் இருக்கும் மூடி வெவ்வேறு வகை தண்ணீரை குறிக்கின்றனவா?
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஆம், என்று டாக்டர் முலே கூறினார்.
சில பொதுவான மூடி நிறங்கள் பொதுவாக எதைக் குறிக்கின்றன என்பது இங்கே:
கருப்பு மூடிகள்: பொதுவாக காரத்தன்மை கொண்ட நீர் (alkaline water), இதன் pH அளவு அதிகமாக இருப்பதால் உடலில் உள்ள அமிலத்தன்மையைக் குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது.
நீல மூடிகள்: பெரும்பாலும் ஊற்று நீர் (spring water), அதன் இயற்கை தாதுக்களுக்காக அறியப்படுகிறது.
வெள்ளை மூடிகள்: பொதுவாக சுத்திகரிக்கப்பட்ட அல்லது வடிகட்டப்பட்ட நீர், எளிய, சுத்தமான நீரேற்றத்தை வழங்குகிறது.
பச்சை மூடிகள்: பெரும்பாலும் சுவையூட்டப்பட்ட நீர் (flavoured water), இது வித்தியாசமான சுவையை விரும்புபவர்களுக்கு உகந்தது.
தெளிவான மூடிகள் (Clear caps): இயற்கை ஊற்று நீர் அல்லது காய்ச்சி வடிகட்டிய நீரை (distilled water) குறிக்கலாம், இது தாதுக்கள் மற்றும் அசுத்தங்கள் இல்லாமல் இருக்கும்.
சிவப்பு மூடிகள்: பொதுவாக எலக்ட்ரோலைட்-செறிவூட்டப்பட்ட நீர் (electrolyte-enhanced water), உடற்பயிற்சி அல்லது நீரிழப்புக்குப் பிறகு தாதுக்களை நிரப்புவதற்கு சிறந்தது.
மஞ்சள்/தங்க மூடிகள்: பெரும்பாலும் வைட்டமின்-செறிவூட்டப்பட்ட நீர் (vitamin-enriched water), இது நீரேற்றத்துடன் ஊட்டச்சத்தையும் அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
எது உங்களுக்கு சிறந்தது?
மருத்துவ ரீதியாக, பாதுகாப்பான, சுத்தமான குடிநீர் மிக முக்கியமான காரணியாகும், மூடியின் நிறத்தைப் பொருட்படுத்தாமல். “தாதுக்கள் அல்லது எலக்ட்ரோலைட்-செறிவூட்டப்பட்ட விருப்பங்கள் விளையாட்டு வீரர்கள் அல்லது குறைபாடுகள் உள்ளவர்களுக்கு உதவக்கூடும் என்றாலும், பெரும்பாலான ஆரோக்கியமான நபர்களுக்கு, வழக்கமான பேக்கேஜ் செய்யப்பட்ட அல்லது ஊற்று நீர் தினசரி நீரேற்றத்திற்கு போதுமானது. காரத்தன்மை கொண்ட அல்லது வைட்டமின்-செறிவூட்டப்பட்ட நீர் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்ற கூற்றுகளுக்கு வலுவான அறிவியல் ஆதரவு இல்லை,” என்று டாக்டர் முலே கூறினார்.
கவனிக்க வேண்டியவை என்ன?
ISI அல்லது FSSAI சான்றிதழ், காலாவதி தேதி மற்றும் சேமிப்பு நிலைமைகளுக்கு எப்போதும் லேபிலை சரிபார்க்க வேண்டும் என்று டாக்டர் முலே வலியுறுத்தினார். மூடியின் நிறத்தை மட்டும் பார்க்காமல், உங்கள் உடல்நலத் தேவைகளின் அடிப்படையில் தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு சிறுநீரக நோய் அல்லது எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகள் போன்ற மருத்துவப் பிரச்சினைகள் இருந்தால், சிறப்பு வகை தண்ணீருக்கு மாறுவதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.
பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரை பொதுவான தகவல்கள் மற்றும் நாங்கள் பேசிய நிபுணர்களின் தகவலின் அடிப்படையில் அமைந்துள்ளது. எந்தவொரு வழக்கத்தையும் தொடங்குவதற்கு முன் எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.