White Rice Cooking Tamil Video, How to cook rice without straining: குக்கர் இல்லாமல் சமைக்கிற பேச்சிலர்கள் பலருக்கு இருக்கிற முக்கிய பிரச்னை, சாதத்தை வடிப்பதுதான். அப்படி குக்கர் இல்லாதவர்களும் வடிக்காமலேயே உதிரியாக சாதம் தயார் செய்ய முடியும்.
Advertisment
அதுவும் படு துரிதமாக இந்த முறையில் தயாரித்து, எரிபொருளை சேமிக்கலாம். அலுவலகம் செல்கிறவர்களுக்கும் மிகவும் உபயோகமான செய்முறை இது. வடிக்காமல் எப்படி சூப்பரான சாதம் சமைப்பது? என இங்கு பார்க்கலாம்.
How to cook rice without straining: வடிக்காமல் சாதம் செய்முறை
Advertisment
Advertisements
முதலில் அரிசியை 3 முறை நன்றாக கழுவவேண்டும். அதன்பிறகு மூடும் வசதி கொண்ட ஒரு பாத்திரத்தில் அரிசியை இடுங்கள். அந்த அரிசியை பாத்திரத்தில் சமமாக பரப்பிக் கொண்டு அதன்மீது தண்ணீர் ஊற்றுங்கள். இந்த சமையல் முறையில் தண்ணீர் அளவுதான் முக்கியம்.
பாத்திரத்தில் அரிசிக்கு மேல் நிற்கும் தண்ணீர் அளவை ஆள்காட்டி விரல் கொண்டு அளந்து பாருங்கள். ஆள்காட்டி விரலின் நுனியில் இருந்து 2-வது வரையைத் (குறுக்கு ரேகை) தொடுகிற வரை தண்ணீர் வைக்க வேண்டும். அரிசிக்கு மேல் நிற்கும் தண்ணீரைத்தான் அளக்கவேண்டுமே தவிர, பாத்திரத்தின் அடிப்பகுதியில் இருந்து அளந்துவிடக் கூடாது.
இதன்பிறகு அரிசி- தண்ணீர் கலவைக்குள் ஒரு ஸ்பூன் சமையல் எண்ணெயும், தேவையான அளவு உப்பும் போட்டுக் கொள்ளுங்கள். அப்படியே பாத்திரத்தை அடுப்பில் வைத்து, கொதிக்க விடுங்கள். ஒரு கொதி வந்ததும், தீயைக் குறைக்க வேண்டும். பாத்திரத்தின் மூடியைத் திறந்து, பின்னர் பாதி திறந்த நிலையில் வைக்கலாம். தேவைப்பட்டால் வேறு மூடியை இதற்கு பயன்படுத்துங்கள். தீயை குறைத்து இப்படி 5 நிமிடங்கள் வேக விடவும்.
பின்னர் சாதத்தை லேசாக கிளறி விடுங்கள். அடுத்து தீயை மேலும் குறைத்து ‘சிம்’மில் வைத்து மூடிவிடவும். 2 நிமிடங்கள் இப்படி இருக்கட்டும். அதன்பிறகு திறந்து பார்த்தால் சாதம் லேசான ஈரப்பதத்துடன் இருக்கும். மீண்டும் லேசாகக் கிளறி விடவும். அடுப்பை அணைத்துவிட்டு, 2 நிமிடம் மூடி வைக்கவும்.
இப்போது திறந்து பார்த்தால் சூப்பரான உதிரியாக சாதம், நன்றாக வெந்திருக்கும். இந்த சாதத்தை சிறிது நேரம் ஃபேன் காற்றில் சூடு தணிய விடுங்கள். அப்போதுதான் சாதம் கட்டி ஆகாமல் உதிரியாக இருக்கும். ஒருமுறை இந்த செய்முறையை பயன்படுத்திப் பாருங்கள்... மீண்டும் மீண்டும் செய்ய விரும்புவீர்கள்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"